துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி; நால்வர் காயம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயன்றதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஐவர் காயமடைந்து, அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும், அதையடுத்து சிறை காப்பாளர்களால் அதனைக் கட்டுப்படுத்த முயற்சி செய்த வேளையில் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி கைதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

அதனைத் தடுப்பதற்காக, சிறை அதிகாரிகளால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் கைதிகள் ஐவர் காயமடைந்து, அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில், கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லை எனவும்,  அமைதியற்று செயற்பட்ட கைதிகள் வெளியில் வராமலிருப்பதை தடுப்பதற்காக, அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொலிஸார், கலகம் அடக்கும் பரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சிறைச்சாலைக்குள் இருந்து தீ ஏற்பட்டிருந்தது. சிறைக்கைதிகளால் இவ்வாறு தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள 4 பேர் இன்றையதினம் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, குறித்த கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக போராட்டம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.