திருகோணமலையில் பெருங்காயம், தொற்று நீக்கிகளுக்கு தட்டுப்பாடு

(எப்.முபாரக்)
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலையடுத்து திருகோணமலையில் பெருங்காயம், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம் மற்றும் தொற்று நீக்கிகளுக்கு பாவிக்கப்படும் திரவப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவியுள்ளது. மருந்துக் கடைகளைத் தேடி மக்களின் படையெடுப்பும் அதிகரித்துக் காணப்படுகின்றது. கொரோனா தொற்று பரவலையடுத்து மக்கள் தமது பாரம்பரிய பழங்கால வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

இதனடிப்படையில் பெருங்காயத்தை தமது உடலில் கட்டினால் நோய்த் தொற்று பரவாது எனவும் அவ்வாறே மஞ்சள் கலந்த சவர்க்காரம் மஞ்சள் பாவிப்பதுடன் வேம்பு இலையை உட்கொண்டு வந்தால் வைரஸ் தெற்றாது என மக்கள் பயன் படுத்துகின்றனர். இதனையடுத்து பெருங்காயம், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம் மற்றும் தொற்று நீக்கிகளுக்கு பாவிக்கப்படும் திரவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதேவேளை குறிப்பாக பெருங்காயத்துக்கு திருகோணமலையில் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
அத்துடன் கொரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் மஞ்சள் கலந்த நீர் தெளித்து வீட்டின் கதவுகளில் வேப்பிலைகளை கட்டியும் வைப்பதைக் காணமுடிகின்றது.