உங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன் ! வீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு


"முழு உலகத்தையும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் என்ற பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது - முடிந்தவரை நீங்கள் வீட்டில் இருப்பதுதான் அது."

"உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தனது டுவிட்டர் தளத்தினூடாக அறிவித்துள்ளார்.

அதேபோன்று, ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாக்க, தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையைத் தயவு செய்து செய்யுங்கள்!” என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுகொண்டுள்ளார். இந்த நிமிடம் வரையான நிலவர அறிக்கையின்படி - உங்களின் பாதுகாப்பிற்காகத் தரப்பட்ட ஊரடங்கு அறிவுறுத்தல்களை மீறியதற்காக இதுவரை சுமார் 11,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். அதேபோன்று எனது பெயரில் போலியான செய்திகள், தகவல்கள் ‘மெசஞ்சர்’ தளத்தினூடாக பரவி வருகிறது. இதுதொடர்பில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


எந்த விதமான அறிவித்தல்களோ, அல்லது தகவல்களோ வெளியிடப்படுமானால், அவை, உத்தியோக பூர்வமாக ஜனாதிபதியின் ஊடகப்பிரினூடாகவும் உத்தியோகபூர்வ முகநூல் அல்லது டுவிட்டர் தளங்களினூடாக மட்டுமே என்றும் ஜனாதிபதி தனது டுவிட்டர் தளமூடாக அறிவித்துள்ளார்.

இதேவேளை,கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களென சந்தேகிக்கப்படுபவர்களையும் அவர்களுடன் பழகியவர்களையும் மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை கள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.