பா.உ கோ.கருணாகரம் அவர்களின் முயற்சியில் கரடியனாறு கரடியன்குளம் மக்களின் காணி விடயத்திற்குத் தீர்வு!


மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பிரதேச மக்களின் வேண்டுகோளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் நேரடி களவிஜயத்தின் மூலம் அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு மக்களுடனான கலந்துரையாலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் (29) கரடியனாறு கரடியன்குளம் பொதுக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் வில்வரெட்ணம், விவசாயப் பண்ணை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி பிரதேசத்தில் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற மக்களிடம் உள்ள அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரம், சுவர்ணபூமி திட்டத்தினால் வழங்கப்பட்ட பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

பின்னர் மேற்படி பிரதேசத்திலுள்ள காணிகள் விவசாயப் பண்ணைக்குரியனவே என்றும் இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் தற்போது அவ்விடங்களில் உரிய பத்திரங்களுடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கு அவர்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர்களுக்கான உரிய காணிகள் சட்டமுறையில் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அனைத்திற்கும் மேலாக அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பிரதேச செயலாளரால் வலியுறுத்திக் கூறப்பட்டமையினையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உரிய காணிகளையுடையவர்கள் அவ்விடத்தில் பிரசன்னமாயிருந்து அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு, அவர்களுக்கான காணிகளை உறுதிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இவ்விடயத்தினை உரிய நடவடிக்கைகள் மூலம் தீர்வு பெற்றுத் தந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதேச மக்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.