அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாறை மாவட்ட மக்கள்

(வி.சுகிர்தகுமார்)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு தமது ஆதரவினை தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

ஆயினும் சத்தொச உள்ளிட்ட அனைத்து விற்பனை நிலையங்களிலும் விலைகுறைப்பினை செய்வதோடு பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்கம் அதிரடியாக சீனி, பருப்பு, ரின்மீன், வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மக்கள் கடந்த அரசாங்கத்தினைவிட இந்த அரசாங்கம் பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக சில பொருட்களுக்கு விலைகுறைப்பினை மேற்கொண்டுள்ளது.

ஆயினும் இந்த விலைகுறைப்பானது அனைத்து விற்பனை நிலையங்களிலும் கடைப்பிடிக்கப்படவில்லை. சத்தொச விற்பனை நிலையத்தில் மட்டும் குறைவடைந்துள்ளது. அத்தோடு அங்கும் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இவற்றை சீர் செய்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி உடையவர்களாக என்றும் இருப்போம் என்றனர்.

இதேநேரம் கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்றபோதும் அரசாங்கம் நாட்டை முழுவதுமாக முடக்கவில்லை. குறிப்பிட்ட பிரதேசங்களை மாத்திரம் முடக்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையையும் பாதுகாத்துள்ளது. அந்த வகையில் நாம் அரசை வரவேற்பதுடன் நன்றி தெரிவிக்கின்றேன் என பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சிறந்த மக்கள் சேவை வழங்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசுக்கும் அக்கரைப்பற்று மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

அத்தோடு மேல் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை மீண்டும் கொடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன். இது தொடர்பில் மிக்க மகிழ்ச்சி அடைவதுடன் இவ்வாறான அரசாங்கமே எங்களுக்கு தேவை என்றும் கூறினார்.