காத்தான்குடியில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா


மட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான ஆரையம்பதி ஒள்ளிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் கொழும்பிலிருந்து தனியார் பஸ் வண்டியொன்றில் காத்தான்குடிக்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கும் கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு வந்த மற்றொரு நபருக்குமாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையில் நேற்று இவர்களுக்கு மேற் கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த கர்ப்பிணிப் பெண்ணுடைய கணவருக்கும் பி.சி.ஆர் மேற் கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கர்ப்பிணிப் பெண் இன்னும் சில தினங்களில் குழந்தை பிரசவிக்க உள்ள நிலையில் இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கர்ப்பிணிப் பெண்ணை கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 54 பேருக்;கு காத்தான்குடியில் மேற் கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது இவ்விருவருக்குமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் ஏனையோருக்கு தொற்று இல்லை என பி.சி.ஆர். அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்