தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக உள்ளோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


இந்த நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் நாட்டில் இத்தனை தாக்கங்கள் ஏற்பட ஜனாதிபதியே பிரதான காரணமாகும்.

சுகாதார துறையினர் கையாள வேண்டிய விடயங்களை இராணுவத்திடம் ஒப்படைத்தமையினாலேயே அனைத்தும் பிழைத்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.


கொவிட் -19 தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிறுவர் ஊழிய வயதெல்லையை 16 வயதாக்கும் யோசனை நல்லதொன்றாகும். அதேபோல் தோட்டத்தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக வழங்குவது இன்னமும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஆயிரம் ரூபாய் வழங்குவதில் அரசாங்கம் எந்தவித முயற்சிகளும் எடுத்ததாக தெரியவில்லை. வயதெல்லைக்கு ஒரு சட்டத்தை இயற்றுவதை போல ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தையும் இயற்றி மலையக மக்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

அதேபோல் இலங்கை இன்று கொவிட் -19 வைரஸ் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக ஐநூறு கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டும் வருகின்றனர். இதனால் மரணங்களும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

எனவே இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதியாக இருபத்துடன், இருபத்தைந்து மாவட்டங்களில் இருபத்தைந்து இராணுவ அதிகாரிகளை நியமித்து அவர்களை குறித்த கொவிட் கணிகாணிப்பு மற்றும் மேற்பார்வை செய்ய ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந்த நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் இத்தனை தாக்கங்கள் ஏற்பட முழுமையாக காரணம் ஜனாதிபதியே. அவரே இதற்கான பொறுப்பினை ஏற்றாக வேண்டும். ஒரு சிறிய தீவுக்குள், குறுகிய மக்கள் தொகை வாழும் இந்த நாட்டுக்குள் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாதமைக்கு பிரதான காரணம் பொறுப்புகளை சுகாதார துறையிடம் இருந்து இராணுவத்திற்கு வழங்கியமையேயாகும். இதுதான் நாடாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது.

இராணுவத்தை வைத்து மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். தேர்தல் வெற்றியை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்கின்றது. அப்போது இருந்த நிலையில் இன்று இந்த நாட்டு மக்களின் மனநிலை இல்லை.

இந்த ஆட்சியில் வெளிநாட்டு தூதுவர்களாக, அமைச்சுக்களின் செயலாளர்களாக, மாகாண ஆளுநர்களாக, அரச திணைக்கள அதிகாரிகளாக இராணுவ அதிகாரிகளாக நியமித்து இந்த நாட்டை முழுமையாக பாதாளத்தில் தள்ளும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

எனவே இராணுவ மயப்படுத்தல் இல்லாத ஜனநாயக நாட்டினை உருவாக்க வேண்டும். அதேபோல் வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர்,

கொவிட் -19 தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அணைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் அமைப்பினர், பொதுமக்கள் சார்வில் இன்று காலை 10 மணிக்கு அடையாள கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமைப் போர், அதில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு இன்று கொவிட் -19 தொற்று பரவக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது, எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அல்லது அவர்களை பிணையில் விடுவதர்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளோம் என்பதையும் ஜனாதிபதியிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதனை சபையில் மக்கள் சார்பில் முன்வைக்க விரும்புகிறேன் என்றார்.