இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனங்களின் ஆதிக்கம்!


இலங்கை மக்கள் உணவுப் பொருட்களின் ஊடாக நச்சுப் பொருட்களை அதிகளவில் உள்ளெடுத்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் அநுருத்த பாதெனிய. உலகில் உணவுகளின் மூலம் இரசாயன நச்சுப் பதார்த்தங்களை மிகக் கூடுதலான அளவில் உள்ளெடுப்பவர்கள் இலங்கை மக்கள்தான் என்ற மற்றொரு அச்சமூட்டும் தகவலையும் மருத்துவர் அநுருத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.

பாரதூரமான இந்த அதிர்ச்சி தருகின்ற தகவலானது சாதாரண ஒரு நபரிடமிருந்து வந்திருந்தால் அதை எம்மால் புறக்கணித்து விட முடியும். ஆனால் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவரான விசேட மருத்துவ நிபுணரிடமிருந்து வந்துள்ள அத்தகவலை அலட்சியப்படுத்து விட முடியாதிருக்கின்றது. அது வெறும் தகவல் அல்ல, அது இலங்கை மக்களுக்கான ஒரு எச்சரிக்ைக! எமது மக்களின் எதிர்கால ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கப் போகின்ற ஒரு விடயம் அது.

நச்சுப் பொருட்களை உள்ளெடுப்பதனால் உடலில் எவ்வாறான பாதகமான விளைவுகள் ஏற்படுமென்பதை புதிதாகக் கூற வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் தொடர்ச்சியாக அறிவூட்டும் தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாரதூரமான வியாதிகள் பலவற்றுக்கு நச்சு இரசாயனங்கள் பெரிதும் காரணமாக அமைவதாக மருத்துவ தகவல்களில் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

நச்சு இரசாயனங்கள் மனிதருக்கு மாத்திரமன்றி, எம்மைச் சூழவுள்ள பிராணிகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தரைச்சூழல், நீர்ச்சூழல், வளிமண்டலம் ஆகிய அனைத்துக்குமே நச்சுப் பொருட்கள் பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நச்சுப் பொருட்களின் பாவனையானது அதிகரித்துச் செல்வதனால் அதனால் உண்டாகின்ற பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

நாம் இன்று பயன்படுத்துகின்ற உணவுப் பொருட்கள் அனைத்திலுமே நச்சு இரசாயனப் பதார்த்தங்கள் இரண்டறக் கலந்து விட்டன. தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், உபஉணவுப் பொருட்கள், மென்பானங்கள், பொதி செய்யப்பட்ட உணவுகள் என்றெல்லாம் எந்தவொரு உணவை எடுத்துக் கொண்டாலும், நஞ்சற்ற உணவைக் காண்பதே அரிதாகி விட்டது.

அனைத்துப் பயிர்களுக்கும் இடப்படுகின்ற பசளைகளில் நச்சு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன. பயிர்களுக்கு விசிறப்படுகின்ற பீடைநாசினிகள் அனைத்துமே கொடிய நச்சுப் பதார்த்தங்கள் ஆகும். உணவுப் பொருட்களை பழுதடையாமல் வைத்திருப்பதற்காக இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்களைப் பழுக்க வைப்பதற்காக இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இவையெல்லாம் போதாதென்று உணவுகளின் மணமூட்டிகள், சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்றவையெல்லாம் எமது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்ற நச்சுப் பொருட்கள் ஆகும்.

எமது அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனத்தைத் தவிர்ப்பதென்பது இலகுவான காரியமல்ல. சுருங்கச் சொல்வதாயின் நச்சு இரசாயனங்களுக்கு நாம் பழகிப் போய் விட்டோமென்பதே உண்மை. இரசாயனப் பசளைகளுக்குப் பதிலாக இயற்கை சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்ற போதிலும் அத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியளிப்பதாக இல்லை. இரசாயனப் பசளைகள் இல்லாது போனால் விளைச்சலே கிடையாதென்பதுதான் உண்மை நிலை.

நாம் நீண்ட காலமாக இழைத்து வருகின்ற தவறுகளே இதற்கான காரணங்களாகும். பல தசாப்த காலத்துக்கு முன்னரே எமது விவசாயிகள் இயற்கைப் பசளையைக் கைவிட்டு இரசாயனப் பசளைக்கு பழக்கப்பட்டு விட்டனர். சனத்தொகையின் அதிகரிப்புக்ேகற்ப உணவு உற்பத்தியின் அதிகரிப்பு அவசியம். எவ்வாறாயினும் கூடுதலான விளைச்சலை பெற்றுக் கொண்டால் போதுமென்பதே விவசாயிகளின் எண்ணமாக உள்ளது.

இதன் காரணமாக அளவுக்கு மீறிய உரப் பாவனை மற்றும் பீடைநாசினிகளின் பாவனையினால் எமது அன்றாட உணவுகளே விஷமாகிப் போயுள்ளது. கடைகளில் விற்கப்படுகின்ற எந்தவொரு பீடைநாசினியையோ அல்லது உரவகைகளையோ விவசாயிகள் தடையின்றி வாங்கிப் பயன்படுத்துகின்ற நிலைமை ஆரோக்கியமானதல்ல. அதேபோன்று உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும் அவ்வாறுதான் தாராளமாக இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் அன்றாடம் உண்கின்ற அத்தனை உணவுகளுமே இன்று நஞ்சாகிப் போய் விட்டன. இவ்வாறான ஆபத்து தொடர்வதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது. உணவில் நச்சுப் பதார்த்தங்கள் கலப்பதைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் காண்பதில் நாடு இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது