வெள்ளைவானை விட்டது வேறு எவரோ | என்னை பற்றி வெள்ளை வானை வைத்து பொய் பரப்பினர் – ஜனாதிபதி கோத்தாபய


என்னைப் பற்றி பொய்களைப் பரப்ப ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் உள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் செய்யப்படுகின்றது. முன்னர் வெள்ளை வான்கள் மற்றும் சுறாக்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டேன். இப்போது சூழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறு இன்று (3) வவுனியாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

வெடிவைத்தகல்லு கிராமத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“இந்தவறிய மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு புரிவதில்லை. அவர்கள் இங்கு வருவதுமில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்த போது சுற்றாடலைப் பாதுகாக்க என்னைப்போல் எவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் வெள்ளை வான் அனுப்பியதாக அந்தக்காலத்தில் கூறினார்கள். நபர்களை கடத்தி முதலைகளுக்கும், எனது மீன் தொட்டியில் உள்ள சுறாக்களுக்கும் உண்ணக் கொடுத்ததாக கூறினார்கள்.

இப்போது வெள்ளை வான் இல்லை. சுறாக்களும் இல்லை. முதலைகளும் இல்லை. அவையனைத்தையும் வேறு எவரோ செய்திருக்கின்றார்கள்.

எமது தேங்காய் எண்ணெய்யே சிறந்தது. நாம் பாம் எண்ணெய்யை தடை செய்தோம். எமது தேங்காய் எண்ணெய்க்கு உலகில் பாரிய கேள்வி உள்ளது. ஆனால் நாம் அந்தளவிற்கு தெங்கு உற்பத்தியை செய்யவில்லை.

இதனால் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய்யை வர்த்தகர்கள் கொண்டு வருகின்றனர். அவற்றின் தரத்தை ஆராய அரச நிறுவனங்கள் உள்ளன. இப்போது அவற்றை கைப்பற்றியதால் நச்சு தேங்காய் எண்ணெய் கொண்டுவந்ததாக எம்மைத் தூற்றுகின்றனர். அதனை நாம் கொண்டு வரவில்லை. வர்த்தகர்களே கொண்டு வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டி, அவரை தோற்கடிப்பதற்கு எதனோல் ஒரு காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எதனோல்.. எதனோல்.. என அனைத்து இடங்களிலும் கூறப்பட்டது. பதாகைகள் ஒட்டப்பட்டமை நினைவிருக்கும் அல்லவா? மக்களிடையே அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். திருட்டுத் தனமாக செயற்படும் இந்த வர்த்தகர்களும் எமது மக்களே. திருட்டுத்தனமாகக் கொண்டு வருகின்றனர். அவற்றைக் கைப்பற்றவே அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றைக் கைப்பற்றாவிட்டால், அவை மக்களைச் சென்றடையும்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியான குடும்பத்தையம், வளமான தேசத்தையும் உருவாக்குவதாக உறுதியளிக்கிறேன்” என்றும் கூறினார்.