அவசரகால சட்டம் – ஐ.நா கடும் அதிருப்தி


இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் இராணுவமயப்படுத்தல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று (13) ஜெனீவாவில் ஆரம்பமாகியது.

இதன்போது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை முன்வைத்தார்.

அதன்படி சட்டத்தரணி உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்ட அவர் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்தோடு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகள் குறித்து உறுப்புநாடுகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.