பல எரிவாயு வெடிப்புக்கள் ; லிட்ரோ கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதில்?



லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானதா? என்பது குறித்து அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு அந்த நிறுவனம் நேற்றைய தினம் (24) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விளக்கமளித்துள்ளது.

சந்தையில் விநியோகிக்கப்படும் தமது சிலிண்டரின் தரம் குறித்து, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் விநியோக பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன விளக்கமளித்தார்.

அனைத்து விதமான சர்வதேச தரங்களுக்கும் அமைவாகவே, தமது எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்து, நிறுவனத்தின் இரசாயண செயற்பாட்டு பொறியியலாளர் ஜயந்த பஸ்நாயக்க, இதன்போது கருத்துரைத்தார்.

கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அருகிலுள்ள பிரபல உணவகமொன்றில் அண்மையில் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு தமது நிறுவனம் எரிவாயு விநியோகிப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதற்கு முன்னரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நேர்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர், அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தார்.