20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு !



நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரித்துள்ளது.

20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள 4 இலட்சத்து 76 ஆயிரத்து 677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் 5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 67 சுகாதார பிரிவுகள் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த வலயலங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலை சூழல்கள், புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும் பகுதிகள் போன்றவற்றை உடனடியாகச் சுத்தப்படுத்தாவிட்டால், அபாயகரமான நிலைமை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.