கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் !



கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியின் அதிகூடிய விலையாக 1,600 ரூபாயாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி 2,200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய மேற்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (06) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், இந்த நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், நேற்று முன்தினம் (03) மாலை, மாநகர மேயரால் மாநகர சபைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடன் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே முள் அடங்கியிருத்தல் வேண்டும் எனவும் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாடுகளை விற்பனை செய்வோர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு கிலோகிராம் இறைச்சியை ஆகக்கூடியது 1,300 ரூபாய்க்கு வழங்க வேண்டும் எனவும் மேயரால் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

இதனை மீறும் மாடு வியாபாரிகள் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.