சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவிப்பு !





எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக தற்போது பயன்படுத்தும் ‘டால்க்’ கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடர் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பன்னாட்டு நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான நுகர்வோர் புகார் தெரிவித்து வழக்கும் தொடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்த பவுடர் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும், பல்வேறு நாடுகளில் அதன் விற்பனை தொடர்கிறது.

ஜோன்சன்ஸ் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) வேதிப்பொருள் கலந்துள்ளது. இது கருப்பை புற்று நோயை உருவாக்கக் கூடியது என்பது முக்கிய குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக சர்வதேச அளவில் 38,000க்கும் மேற்பட்ட நுகர்வோர் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்து வருகிறது. தாங்கள் தயாரிக்கும் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபித்துவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டால் ஆஜான்சன் நிறுவனத்தின் பிற பொருள்களின் விற்பனையும் மந்தமானது. வழக்குகளுக்கான செலவும் அதிகரித்துவிட்டது.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.