சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றிய செயல்பாடுகளே நாடு மீட்சிபெற வழிவகுக்கும் – ரிஷாட் எம்.பி!


சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று (12) தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய கொள்கைப் பிரகடன உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களோடு நாங்கள் உடன்படுகின்றோம். அவருக்கு கிடைத்துள்ள பதவிக் காலத்துக்குள், இந்த நாட்டிலே நல்ல மாற்றங்களை கொண்டுவருவதன் ஊடாக, பொருளாதார நலனை மையமாக வைத்து முன்னேறக்கூடிய வாய்ப்பு தென்படுகிறது. அதனை அவர் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனினும், அவருக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் ஒருசில இனவாத சக்திகள் இந்த பாராளுமன்றத்துக்குள்ளும் இருக்கின்றன. ஆட்சிபீடம் ஏறும் நோக்கில் இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு, அதனை விதைத்தவர்கள் இங்கு இன்னும் இருக்கின்றனர். எனவே, ஜனாதிபதி மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் அவர்கள் அனுமதிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் சமமாகக் கருதி, நல்ல திட்டங்களை முன்வைக்கும் போதுதான் நாடு மேம்பாடு அடையும். குறிப்பாக 19வது திருத்தத்தை 22 வது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப் போவதாக தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள்தான், இந்த நாட்டின் ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்க வழிவகுக்கும். அத்துடன் வெளிநாட்டு உதவிகள் எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.

அவரது உரையில் சுட்டிக்காட்டப்பட்ட இன்னொரு விடயம்தான், நமது நாடு பொருளாதார கொள்கையற்ற, வெளிநாட்டுக் கொள்கை இல்லாத நாடாக இருக்கின்றது என்றார். இவற்றை எல்லாம் சரிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். புத்திஜீவிகளும், பொருளாதார நிபுணர்களும், திறன்படைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப விருப்பம் கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி அவர்களை முறையாக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். 

இவ்வாறான சிறப்பான விடயங்களுக்கு எமது கட்சியான ‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ பூரணமாக ஒத்துழைக்கும் என்பதை ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துள்ளோம். இப்போது பாராளுமன்றத்திலும் அதனை பகிரங்கமாகக் கூறுகின்றோம்.

முன்னர் இருந்த ஜனாதிபதிக்கு நடந்ததைப் போன்று உலக வரலாற்றில் எவருக்குமே நடந்திராது என்றே நாம் நினைக்கின்றோம். அவர் தேர்தல் மேடைகளிலே இனவாதத்தை மூலதனமாக வைத்து பிரசாரம் செய்தார். அதுமாத்திரமின்றி, பதவிப்பிரமாண உரையிலும், முதலாவது கொள்கைப்பிரகடன உரையிலும் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி, மதவாதத்தையே கக்கினார். சிறுபான்மையினமான முஸ்லிம்களுடன் அவர் நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானதாகும். கொவிட் காரணமாக மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கின்ற போது நாம் அவரிடம் சென்று கெஞ்சினோம். 

முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சமூகப் பெரியார்கள் மற்றும் மாற்று மதச் சகோதரர்கள் எல்லோரும் அவரிடம் சென்று மனச்சாட்சியுடன், மனிதாபிமானத்துடன், நியாயமாக நடந்துகொள்ளுமாறு கோரிய போதும் அவர் எதற்கும் செவிசாய்க்கவில்லை. உலக நாடுகளிலே எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாத அக்கிரமச் செயலை அவர் நடாத்தி முடித்தார். எனினும், நாங்கள் ஆகக்கூடிய அழுத்தங்களையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டிருந்த போதும், எதனையுமே அவர் கருத்திற்கெடுக்காது, முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டாது நடந்துகொண்டார்.

அதுமாத்திரமின்றி, அவரது இரண்டாவது வருடப் பூர்த்தி விழாவின் போது, தன்னை ஒரு பெரிய வீரனாக காட்டுவதற்காக, “கூரகலை ஜெய்லானியையும்”, பொத்துவில் “முகுது விகாரை” பிரதேசங்களையும் தான் விடுவித்துள்ளதாக வீர வசனம் பேசினார். முஸ்லிம்களினால் காலாகாலமாக, பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்ட சொத்துக்களையே விடுவித்ததாக உலகுக்கு காட்டி பெருமைபட்டார்.

அவரது பதவிக்காலத்திலே இனவாதத்தை விதைப்பதிலேயே குறியாக நின்று காலத்தை கடத்தினார். நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லக் கூடிய எந்தவொரு கரிசனையையும் அவர் காட்டவில்லை. 25 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கினார். தேர்தல் காலத்திலே விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாற்றமாக அசேதனப் பசளையை தடை செய்தார். மீனவ சமூகம் பாதிப்படையக் கூடிய பலவகையான செயற்பாடுகளை முன்னெடுத்தார். 

அவரது ஆட்சிக் காலத்திலே எந்தவொரு திட்டமிடல் இல்லாமலேயே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. வரிகளை குறைத்தார். பொருளாதார வளர்ச்சிக்கு அவரிடம் எந்தவிதமான கருத்திட்டங்களும் இருக்கவில்லை. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் உறவைப் பேணுவதில் அவரிடம் தூரநோக்கு இருக்கவில்லை. தான் ஒர் அரசனாக அல்லது மாமன்னனாக விளங்க வேண்டுமென்றமாம் மமதையில், 20வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்து அதனையும் நிறைவேற்றினார். 

எதிர்க்கட்சியில் இருப்பவர்களை எல்லாம் உடைத்தெடுத்து, அக்கட்சிகளை சிதறடித்து 20வது திருத்தத்தை நிறைவேற்றும் தனது இலக்கை அடைந்தார். அவ்வாறான பலம்பொருந்திய ஜனாதிபதி, தற்போது பட்டுத்திரிகின்றபாட்டை உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றது. இருப்பதற்கு இடமில்லை, போவதற்கு போக்கிடம் இல்லை. இதுதான் இப்போதைய நிலை.

ஆகையால், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமில்லாமல், இன, மத பேதங்களுக்கு அப்பால் நாட்டை கட்டியெழுப்புகின்றபோது மட்டும்தான் இந்த நாடு முன்னேறும். அதன்மூலமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு நடந்து முடிந்தவைகள் சான்று. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் செயல்பாடும், அவருக்கு நடந்தவைகளும் மற்றைய அரசியல் தலைமைகளுக்கு ஒரு பெரிய முன்னுதாரணம்.

அண்மையில் நாவலப்பிட்டி மற்றும் அக்குரணையில் இடம்பெற்ற வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறன அனர்த்தங்களை தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்க வேண்டும்.

அத்துடன், கடந்த நல்லாட்சிக் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த போது, வடக்கு மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் மூலம் பல அபிவிருத்திகளை மேற்கொண்டோம். ஆனால், கடந்த அரசாங்கம் பதவியேற்றவுடன் அதன் செயற்பாடுகளை முடக்கியது. எனவே, மீள்குடியேற்ற செயலணிக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கி, அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்குமாறும் வேண்டுகின்றோம். அத்துடன், வடக்கையும் – தெற்கையும் 100 கிலோமீட்டர் வரையில் சுருக்கும் புத்தளம் – மன்னார் பாதையை மீளத் திறக்குமாறும், அதன் மூலம் மக்களின் அன்றாடப் பயணங்களையும் பயன்பாடுகளையும் எளிதாக்கித் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சுமார் நான்கு இலட்சம் லீற்றர் வரையில் எரிபொருள் தேவைப்படுகின்றது. அறுவடை நடைபெறும் இக்காலத்தில் சுமார் ஒரு இலட்சம் லீற்றர் வரையில் எரிபொருள் கிடைக்கின்றது. எனவே, அரசு அவர்களுக்கு தேவையான எரிபொருள் வழங்குவதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும்.

அதேபோன்று, புத்தளம், முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை உள்ளிட்ட இன்னும் பல மாவட்ட மீனவர்களுக்கு, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே, விசேட செயற்திட்டம் ஒன்றின் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நிவர்த்திக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

மேலும், “அரகல” போராட்டக்காரர்களின் விடயத்திலே கண்மூடித்தனமாக செயற்படாமல், ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும். அடாவடித்தனமாக வீடுகளை உடைத்து, சேதங்களை விளைவித்தவர்களுக்கு தண்டனை வழங்குங்கள். ஆனால், ஜனநாயக முறையில் நாட்டுக்காக போராடியவர்களை சின்னஞ்சிறு காரணங்களுக்காக பழிவாங்கி, இன்னுமொரு கலவரம் உண்டாவதற்கு வழிசமைக்க வேண்டாம் என்று வேண்டுகின்றேன்.

அத்துடன், ஜனாதிபதி தனதுரையில், “இனவாத, மதவாதமற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப செயற்படுவேன்” என்று தெரிவித்திருந்தார். அதனை வரவேற்கின்றோம். அதேபோன்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்தமாட்டேன்” என்று ஜனாதிபதி எமக்கு உறுதியளித்திருக்கிறார். அவருக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.” என்று கூறினார்.