பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல் !


கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஒருநாள் சேவையின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட சான்றிதழை இணைக்க வேண்டியது அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பும் போது பாடசாலை பரீட்சார்த்திகள் எனில், பாடசாலை அதிபரினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை மாத்திரம் இணைப்பது போதுமானதாகும்.

அத்துடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில், பணம் செலுத்தி பரீட்சை பெறுபேறுகளை, பெற்றுக்கொண்டமைக்கான பத்திரத்தை இணைத்து விண்ணப்பிப்பது போதுமானதாகும் எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் பெறுபேறுகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk க்கு பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.