பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது!


வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

17 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் பாதுகாப்புக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை இதுவரை பொலிஸாரின் பாதுகாப்பில் பொதியிடப்பட்டு சோதனையிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா கூறியுள்ளார்.

இதேவேளை, 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களை மாகாண ஆளுநர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.