“உயிர்களைக் காக்க இரத்ததானம் செய்வோம்”-செங்கலடி பிரதேச செயலாளர்!


(தீரன்)
“உயிர் காப்பான் தோழன்” என்பார்கள் இதற்கு ஒரு படி மேல் சென்று உயிரை காப்பவன் இறைவன் என்பார்கள்.

இவ்வாறு இந்த உலகத்தில் உள்ள மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக மனிதநேயம் கொண்ட மனிதர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற போற்றுதற்குறிய, மதிக்கப்படவேண்டிய இறைவனுக்கு ஒப்பான ஒரு செயல்தான்  இரத்ததானமாகும்.

இந்த இரத்ததானத்தின் ஊடாக உலகில் ஒரு நொடிப்பொழுதில் பல கோடிக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எதிர்வரும் 14ம்  திகதியை இரத்ததான நாளாக கடைப்பிடித்துவருகின்றனர். இரத்தத்தின் பிரிவுகளை கண்டுபிடித்த கார்ல் லாண்ட்ஸ்டீனார் அவர்களின் பிறந்த தினத்தையே இன்று இரத்ததான நிகழ்வாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த இரத்ததான நிகழ்வு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் இரத்தங்களை தானம்செய்திருந்தார்கள்.

இரத்ததான நாளினை முன்னிட்டு நடைபெற்ற இன்நிகழ்வில் கலந்துகொண்ட செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் கூறுகையில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் தங்களது இரத்தங்களை தானம் செய்துகொண்டிருக்கின்றார்கள் இவர்களின் இந்த இரத்தங்கள் எங்கோ ஒரு மூலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களை காப்பாற்றும் என்பதை அறிந்தே இவர்கள் தங்களது இரத்தங்களை தானம் செய்துகொண்டிருக்கின்றார்கள் சில சமயம் நாங்கள் கொடுக்கும் இரத்தங்கள் இரத்த வங்கியின் ஊடாக எங்களுக்கோ அல்லது எங்கள் உறவினர்களுக்கோ பயன்படலாம் எனவே அனைவரும் இரத்தானம் செய்யவேண்டியது அவசியமாகும்.

எங்களது பிரதேச செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இதுபோன்ற இரத்ததான நிகழ்வுகளை ஏனையவர்களும் நடாத்துவதற்கு முன்வரவேண்டும் இந்த நிகழ்வை நாங்கள் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் ஏனையவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடாத்திக்கொண்டிருக்கின்றோம் எதிர்வரும் காலங்களில் எங்களது ஏனைய உத்தியோகத்தர்களும் இதுபோன்ற இரத்ததான நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

இவ்வாறு இரத்ததானம் செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க,தனியார் உத்தியோகத்தர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் தொண்டு நிறுவன ஊழியர்கள் என அனைவரும் உணர்ந்து தங்களது இரத்தங்களை தானம்செய்து வருகின்றார்கள்.

நோய், விபத்து போன்ற பல காரணங்களினால் மட்டக்களப்பில் இன்று இரத்தத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மனிதநேயம் கொண்ட நாம் அனைவரும் எங்களுடைய இரத்தங்களை தானம் செய்வதன் ஊடாக பல உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவி செய்யமுடியும் எனவே அனைவரும் இரத்ததானம் செய்வோம்.

இரத்தானம் பற்றிய சில முக்கிய தகவல்கள்

ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

யார் யார் இரத்த தானம் செய்யலாம்

17 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.
இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.
இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.
இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.

ரத்த தானம் செய்யக் கூடாதவர்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா-காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பால் வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
கடந்த ஒரு வருடத்தில் மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சமீபத்தில் நோய் தடுப்பு ஊசி போட்டவர்கள், கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள், மாதவிடாய் காலத்தில் இருப்பவர்கள்.
இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
இரத்த தானம் என்ற வாக்கியத்திலேயே தானம் என்று இருப்பதால் இரத்தத்தை தானம் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்

இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

இரத்ததானத்தின்போது என்ன நடக்கிறது?

எமது உடலில் சுமார் 4500 – 5000 மில்லிலீற்றர் இரத்தம் பாய்ந்துகொண்டிருக்கிறது. இதில் 400 மில்லிலீற்றர் அளவு இரத்தமே தானமாக பெறப்படுகிது. இரத்தத்தை நீங்கள் தானம் செய்யத் தொடங்கிய நிமிடம் முதல் புதிய இரத்தம் உற்பத்தியாகத் தொடங்கிவிடும்.

இரத்ததானத்தின்போது அறியப்படுபவை எவை?

இரத்ததானம் செய்பவருடைய விபரம் பூர்த்தியாக்கப்படுகிறது.
அவருடைய குருதி நிறப்பொருளின் அளவு அளவிடப்படுகிறது.
மருத்துவ அதிகாரியினால் இரத்ததானம் செய்பவரின் குருதியமுக்கம், உடற்தகுதி என்பன பரிசோதிக்கப்படுகின்றன.
நிறை அளவிடப்படுகின்றது.

இரத்த தானத்தை வழங்கி பின் என்ன செய்யவேண்டும்?

10 – 15 நிமிடங்கள் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.
சூடாகவோ குளிராகவோ ஏதாயினும் பானம் அருந்தவேண்டும்.
அன்றை தினத்தில் கடினமான உடல் களைக்கக் கூடிய வேலைகளை செய்யாது தவிர்த்தல் வேண்டும்.
நாளாந்தம் செயற்பாடுகள் யாவற்றிலும் ஈடுபடலாம்.
போதியளவு நீரை அருந்தவேண்டும்.
வழமையான உணவுகளை உண்ணலாம்.