நாச்சியார் பாரம்பரிய உணவகத்தின் புதிய கிளையினை நிதியமைச்சின் செயலாளர் கல்லடியில் திறந்துவைத்தார்.

(உ.உதயகாந்த்)

நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலைக்கூடல் நிகழ்வானது (24) சனிக்கிழமை கல்லடி புதுபாலத்தடியில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றபோது நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நிதியமைச்சின் செயலாளர் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாச்சியார் பாரம்பரிய உணவகத்தினையும் திறந்துவைத்தார்.

இங்கு இடம்பெற்ற கலைக்கூடல் நிகழ்வில் பல்லின சமூகத்தின் கலை , கலாசாரத்தினை பிரதிபலிக்குமுகமாக சிறார்களினால் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை நிகழ்வுகளும், நல்லிணக்க நடனங்களும் இடம்பெற்றதுடன், முணைக்காடு நாக சக்தி கலை மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கும்பகர்ணன் வதை நாட்டு கூத்து இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரச அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் உயரதிகாரிகலென பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் ஏற்பாட்டில் ஏற்கனவே நாச்சியார் பாரம்பரிய உணவகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது கிளையினையே இந்நிகழ்வின் போது அதன் தலைவி திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நிதியமைச்சின் செயலாளரினால் திறந்திவைக்கப்பட்ட்து.