( ரவிப்ரியா )
கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த திருமதி மங்கையற்கரசி மனோகரன் அண்மையில் மஜிஸ்ரேட் மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இவர் சின்னத்தம்பி சந்தனமாதா ஆசிரிய தம்பதிகளின் புதல்வியாவார். கோட்டைக்கல்லாறு
மகாவித்தியாலயம், வந்தாறுமூலை மத்திய கல்லூரி, தெல்லிப்பளை ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். மாணவப் பருவத்தில் விளையாட்டிலும் திறமைகாட்டி பல தடவை சம்பியனாகவும் தெரிவு செய்யப்படடடவராகும்.
1979ல் மக்கள் வங்கியில் இலிகிதராக இணைந்து கொண்டு, 1994ல் மட்டக்களப்பு நகரவங்கிக் கிளையில் உதவி முகாமையாளராக பணியாற்றியதுடன், மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 2009ல் வங்கி கிளை முகாமையாளராக பதவி உயர்வு பெற்றார். தற்போது கல்லாறு மக்கள் வங்கி கிளையில் முகாமையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். வாடிக்கையாளர்களுடனும் பொதுமக்களுடனும் நல்லுறவைப் பேணி சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
சிறந்த குடும்ப பின்னணியைக் கொண்ட இவர் மக்கள் வங்கியின் இந்து அமைப்பு மூலம் சிறந்த சமய சேவையும் செய்து கொண்டிருக்கின்றார். பொதுமக்களோடு நெருங்கிப் பழகுவதிலும், அவர்களுக்கு உதவுவதிலும,; இயல்பாகவே ஆர்வம் கொண்டவர். சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவராகும்.