(சித்தாண்டி நித்தி) கிரான் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் செவ்வாய் கிழமையன்று (10) காலை சுமார் 9 மணி தொடக்கம் நண்பகல் 2 மணி வரை தொப்பிகல் மீயாங்கல்குளம், குடும்பிமலை, மீரானக்கடவை ஆகிய கிராம சேவகர் பிரிவு பொதுமக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொட்டும் மழை என்றும் பாராமல் கிரான் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாகவே இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்குரிய கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரை இடமாற்றம் செய்வதை தடை செய்யக் கோரியும் நேற்று திங்கள் கிழமை குறித்த கிராம சேவகரை இடமாற்றம் செய்யுமாறு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றாச்சாட்டு கோரிக்கைகளுக்கு எதிராகவும் மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து நடாத்திய நபரை கைது செய்யுமாறு கோரி இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரத்திடம் கையளிக்கப்பட்டது. மகஜரைப் பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தங்களினால் சமர்பிக்கப்பட்ட மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றனர்.
திங்கள் கிழமை (9) மியான்கல் குள கிராம மக்களினால் தங்களுக்குரிய கிராம சேவகர் பிரிவில் புதிய வீடுகளை கட்டித்தரும்படியும், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரச மானியப்பொருட்களையும், அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கால்நடை மற்றும் மானியப்பொருட்களையும் அரசாங்கத்துக்கு சொந்தமான அரச உடமைகளையும் மோசடி செய்துகொண்டிருக்கும் கிராமசேவகரை இடமாற்றம் செய்யுமாறும் கோரி இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.