தமிழினத்தின் ஒற்றுமை சீர்குலைகின்ற செய்தி கேட்டு நான் மனவேதனை அடைகின்றேன்- வெள்ளிமலை.

(பழுவூரான்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ.ஞா.கிருஸ்ணபிள்ளை அவர்களினால் நேற்று 22.06.2015 ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக்கூட்டணி அங்கத்துவம் இல்லை என்பதை பத்திரிகை வாயிலாக அறிந்ததாகவும் நான்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்…
ஆனால் இலங்கை நாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழர் ஒற்றுமை மலர வேண்டும் என்னும் தமிழ் தேசியம் மலர வேண்டும் என்ற இந்நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலைகின்ற செய்தி கேட்டு நான் மனவேதனை அடைகின்றேன்.
நான் தமிழ் தேசியத்திற்காக 1965ம் ஆண்டில் இருந்து என்னை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல் அதற்காக சிறைவாசம் மற்றும் பல போராட்டங்களையும், ஆயுதப்போராட்டங்களையும் நடாத்தியுள்ளேன். என்னுடைய வளர்ச்சியை விரும்பாத சில அரசியல் வாதிகள்  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலே எனக்கு சந்தர்ப்பம் வழங்காமல் புறக்கணிக்க எத்தனிக்கிறார்கள்.
கேள்வி உங்கள் கட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து நீக்கியது உண்மையா?
அண்மையிலே பத்திரிகைவாயிலாக நான் அறிந்த விடயம் மட்டுமல்ல இன்று பலராலும் பேசப்படுகின்ற விடயமும் இதுதான். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரியின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினை நீக்கியதாக அறிந்தேன். ஆனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கபடவில்லை.
அவ்விடத்தில் ஊடகவியலாளர் அண்மையிலே வந்தாறுமூலையில் இடம்பெற்ற கூட்டத்தில் த.தே.கூ,தலைவர் இதனை பகிரங்கமாக வெளியிட்டதாகவும் கூறினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினை கூட்டமைப்பில் இருந்து நீக்கினாலும் நீக்காவிட்டாலும் அனைவரும் தமிழ்த் தேசியம் மலர ஒன்றுபட வேண்டும் என்பதுடன் ஒருசிலரின் அற்பசொற்ப ஆசைகளுக்காக யாரையும் பிரித்தாள்வதால் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் இழப்புக்களை மீளப்பெற முடியாது, மீளப்பெறுவதாயின் தமிழினத்தின்  ஒற்றுமை மென்மேலும் வளர தமிழ்தலைமைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லாது போனால் மட்டு மாவட்டத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை குறையும் சந்தர்ப்பம் ஏற்படும்.
கேள்வி; தமிழ் தேசியத்தை எதிர்த்தவர்களுக்கு வேட்பாளர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது அதனை ஆதரித்த உங்களுக்கு ஏன் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றது?
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியம் மலர வேண்டுமாயின் தமிழ் தலைவர்கள் கட்சி பேதமின்றி அனைவரையும் உள்வாங்க வேண்டியது தலையாய கடமையாகும். ஆனால் ஒருசிலரின் அற்பசொற்ப ஆசைகளுக்காகவும் அரசியல் சுயலாபங்களுக்காகவும் தாங்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டும் என்பதற்காக என்னை ஓரம்கட்டுவதாக நான் அறிகின்றேன்.
கேள்வி த.தே.கூட்டமைப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்திற்கான சந்தர்ப்பம் வழங்காவிடின் உங்களின் எதிர்கால அரசியற் பயணம் எவ்வாறு அமையும்?
நான் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என்பது உறுதி. தமிழ்தலைவர்கள் எனக்கு ஆசனம் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன். அதனுடாக மக்களுக்கு பல சேவைகளைப்புரிய வேண்டும். அவ்வாறு சந்தர்ப்பம் வழங்க கட்சி தவறும் பட்சத்தில் அந்த நேரம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வேன்.
கேள்வி தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடர்ந்து உங்கள் கட்சி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா?
தமிழ் மக்களின் நன்மைகருதி கடந்தகால பிரச்சினைகளை தலைவர்கள் சமாளித்து அனைவரையும் ஒன்றாக்கி எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும்.