ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான
கலைவாணி விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று (22) மாலை பிரதேச
செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில்
சிறப்பாக இடம்பெற்றன.
நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் குழுவினரின் சிறப்பு
பஜனையுடன் ஆரம்பமான கலைவாணி விழா நிகழ்வுகளின் சிறப்புப் பூஜைகளை சிவாச்சாரியார் சிவஸ்ரீ
சீ.கெளரிசங்கர சர்மா நடாத்திவைத்தார்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக பிரதேச செயலாளரது அழைப்பையேற்று
ஆலையடிவேம்பில் பிறந்தவரும் தற்போது இறையருளால் சேவிக்கப்பட்டு இந்தியாவின்
ரிஷிகேசத்தில் வாழ்ந்துவருவதோடு, இந்துமத சித்தாந்தங்களை உலகெங்கும் சென்று போதித்து
வருபவருமான தவத்திரு நித்தியானந்த சரஸ்வதி சுவாமிகள் வருகைதந்ததுடன், தியானப்பயிற்சியுடன்
‘ஆசையின் சக்தி’ என்ற தொனிப்பொருளை விளக்கும் சமய சொற்பொழிவினை நிகழ்த்தி
அருளியதோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மரியாதைகளையும் மனதார ஏற்றுக்கொண்டு
அவர்களது வாழ்வு சிறக்கவும் மக்களுக்கு வழங்கும் சேவைகளில் உயர்ச்சிபெறவும்
வாழ்த்தி விடைபெற்றார். அத்துடன் விஜயதசமியான இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின்
பிள்ளைகள் நால்வருக்கு பிரதேச செயலாளர் சுபநேரத்தில் ஏடு தொடக்கிவைத்தார்.
இக்கலைவாணி விழாவைச் சிறப்பிக்கும்வகையில் பிரதேச செயலக
உத்தியோகத்தர்களால் வடிவமைக்கப்பட்ட இருபத்தியிரண்டாவது வாணி விழா சிறப்பு மலரைப்
பிரதேச செயலாளர் வெளியிட்டுவைத்தார். அதன் முதல் பிரதியை ஆலையடிவேம்பு பிரதேச
செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா பெற்றுக்கொண்டதுடன், ஏனைய
பிரதிகளை ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம
உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, மேலதிக மாவட்டப் பதிவாளர்
எம்.பிரதீப் உள்ளிட்ட ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த விழாவில் தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்வுகளில்
ஆலையடிவேம்பு பிரதேசப் பாடசாலை மாணவர்களின் பரதம், கரகாட்டம் போன்ற தமிழர்
பாரம்பரியங்களைப் பறைசாற்றும் மேடை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, அவர்களுக்கான
பரிசளிப்பு வைபவமும் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இவ்விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும்
மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.