சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகளில் கூறும் விடயமல்ல : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்


சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகளில் கூறும் விடயமல்ல, ஒவ்வொரு மனிதனும் நாம் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்ற அதே வேளை மற்றையவர்களுடைய சுதந்திரம், தனித்துவம், மகிழ்ச்சி, மதம், இனம் உள்ளிட்ட விடயங்களை மதிக்கத் தெரியாதிருந்தால் அது உண்மையான சுதந்திரமல்ல என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



இலங்கையின் 68ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது நாட்டிலே இரண்டு மொழி பேசுகின்ற நான்கு மதங்களைக் கைக்கொள்கின்ற ஐந்துக்கு மேற்பட்ட இனங்கள் வாழுகின்றார்கள். நாட்டில் வழுகின்ற அனைத்து இன மக்களும் பல்வேறு பட்ட கலாசார விழுமியங்களால் இணைந்தும் வேறுபட்டும் நிற்கின்றார்கள்.
 இருந்தபோதும் இவர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை என்பது ஒவ்வொரு தனி மனிதரும் மற்றவர்களை மதிக்கத் தவறுகின்ற பட்டிசத்தில் தான் இந்த வேற்றுமைகள் முரண்பாடுகள் இடம் பெறுகின்றது.

எங்களைத் தனித்துவப்படுத்துவதற்காக நாம் கூர்மைப்படுத்திக் கொள்ளுகின்ற விடஙகள் மற்றவர்களுடைய உணர்வுகளையும் அவர்களுடைய தனித்துவத்தினைப் பாதிக்கின்றதாக மாறுகின்ற போது இயற்கையாகவே மோதல்கள் முரண்பாடுகள் ஏற்படுகின்றன
இன்று காணாமல் போயிருக்கின்ற ஒரு விடயம் மனிதத்துவமாகும். இன்றைய அதீத விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே மனிதத்துவத்தினை இல்லாமல் செய்திருக்கின்றன. எது மனிதனுக்குத் தேவையோ அதனை இழந்துவிட்டு சுதந்திரம் என்பதனை பேசிவிட முடியாது. எது சுதந்திரமோ அது ஏற்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.

மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், இளைஞர் தலைமைத்துவப் பயிற்சியினை பெற்ற இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.