ஆலையடிவேம்பு
பிரதேசத்திலுள்ள கண்ணகிகிராமம் கனகர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டின்
தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளர் வி.ஜெகதீஸனின் பகீரதப் பிரயத்தனத்தின் பயனாக அம்பாறை மாவட்ட செயலகத்தின்
பத்து இலட்ச ரூபாய் நிதியுதவியோடு அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கத்தின் திறப்பு விழாவும்
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும் அண்மையில் இடம்பெற்றிருந்தன.
பிரதம
அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனும், விசேட அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர்
ரி.கஜேந்திரனும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டுத்துறைப்
பயிற்றுவிப்பாளர் ஏ.சப்றி நஸார், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம
அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, மேலதிக மாவட்டப் பதிவாளர்
எம்.பிரதீப் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.கேந்திரமூர்த்தி ஆகியோர்
கலந்து சிறப்பித்த குறித்த நிகழ்வுகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்
ஏ.ரிசந்தனுடன் இணைந்து கண்ணகிகிராமம் - 2 கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கனகர்
விளையாட்டுக் கழகம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்வின்
தொடக்கத்தில் அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் அங்கு தேசியக்கொடியேற்றப்பட்டுத்
தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்
நாடாவை வெட்டியும், விபரங்கள் பொறித்த கல்வெட்டைத் திரைநீக்கம் செய்தும் கனகர்
விளையாட்டு மைதானத்துக்கான புதிய பார்வையாளர் அரங்கத்தைத் திறந்துவைத்தார்.
அதனையடுத்து
மங்கல விளக்கேற்றலும், சமய ஆராதனையும் அங்கு இடம்பெற்றன. இவ் ஆராதனையைக்
கண்ணகிகிராமம் முருகன்மலை அருள்மிகு முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ
ரி.குகனேஸ்வர சர்மா நடாத்திவைத்தார்.
தொடர்ந்து
ஆரம்பமான மைதானப் போட்டி நிகழ்ச்சிகளில் முதலாவதாக கழக வீரர்களுக்கிடையேயான 100
மீற்றர் ஓட்டப்போட்டி இடம்பெற்றிருந்தது. இப்போட்டிக்கு நடுவர்களாக
கே.ரஞ்சித்குமார் மற்றும் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர். அதனைத்தொடர்ந்து
ஆலையடிவேம்பு உதயம் அணியினருக்கும் கண்ணகிகிராமம் கனகர் அணிக்குமிடையிலான மாபெரும்
உதைபந்தாட்ட இறுதிப்போட்டி ஆரம்பமானது. இப்போட்டிக்கு நடுவர்களாக அக்கரைப்பற்று பிரதேச
செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத்தோடு இணைந்து எஸ்.ஏ.சஜாத்
மற்றும் எப்.ரிப்னாஸ் ஆகியோர் கடமையாற்றியிருந்தார்கள். ஆரம்பம் முதலே மிகவும்
விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆலையடிவேம்பு
உதயம் அணி அபார வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்தது. அவ்வணியின்
முதல்நிலை வீரரான ஈ.கபில் தனது அணிக்காக ஹட்ரிக் முறையில் 3 கோல்களைத்
தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுக்க, போட்டி நிறைவடைய இரண்டு நிமிடங்கள்
மீதமிருந்தநிலையில் பி.வினோதன் ஒரு கோலைப் போட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தார்.
அடுத்து
இடம்பெற்ற அதிதிகளின் சிறப்புரைகளின்போது பேசிய பிரதேச செயலாளர், இவ்வருடத்தைப்
போன்றே கடந்த வருடங்களிலும் எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் புதுவருடப் போட்டி நிகழ்ச்சிகள் போன்ற அனைத்திலும்
கண்ணகிகிராமத்தின் கனகர் விளையாட்டுக் கழக வீரர்களின் பங்களிப்பு வழங்கியிருந்ததோடு,
குறிப்பாக உதைபந்தாட்டத்தில் அவ்வணியினர் பல போட்டிகளில் தமது திறமையை நிரூபித்துக்
கிண்ணங்களை வென்று எமது ஆலையடிவேம்புப் பிரதேசத்துக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
இன்று இப்பிரதேசத்தில் பல இளைஞர் கழகங்கள் இருக்கின்றபோதிலும் உதைபந்தாட்டமென்றால்
உதயம் மற்றும் கனகர் அணிகளையே குறிப்பிட்டுக் கூறமுடியும். ஆயினும் தமது ஆற்றல்களை
மேலும் வளர்த்துக்கொள்ள சரியான மைதான வசதிகளின்றியும், தேர்ச்சிமிக்க
பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமலும் இந்த இரு அணி வீரர்களும் அசெளகரியங்களை
எதிர்கொள்வதை எனக்கு அவர்கள் தெரியப்படுத்தியதையடுத்து எமது பிரதேச அபிவிருத்தி
வேலைத்திட்டங்களில் அவர்களது மைதானங்களுக்கான புனரமைப்பு வேலைகளுக்கு
முன்னுரிமையளித்து உதயம் விளையாட்டுக் கழக மைதானத்தைச் செப்பனிட்டுக்
கொடுத்ததுடன், இம்மைதானத்துக்கு அவசியத் தேவையாகவிருந்த இந்தப் பார்வையாளர் அரங்கை
அமைப்பதற்காக பல அழுத்தங்களுக்கு மத்தியில் மிகவும் பிரயத்தனப்பட்டு முயற்சிகளை
முன்னெடுத்திருந்தேன். இதுபோலவே இவ்விரு அணி வீரர்களுக்குமான இணைந்த பயிற்சி
முகாமொன்றைக் கடந்த வருடத்தில் இங்கிருக்கின்ற மாவட்டப் பயிற்றுவிப்பாளர் சப்றி
நஸாரைக் கொண்டு இந்த மைதானத்திலேயே ஒழுங்குசெய்து நடாத்தினேன். ஆனாலும் இந்த மைதானத்தில்
ஆங்காங்கே காணப்படும் சிறிய மலைக்குன்றுகளை அகற்றவேண்டிய தேவையை அறிந்துள்ளேன். அதனையும்
விரைவில் செய்துகொடுப்பேன் எனக் கூறினார்.
தொடர்ந்து
உரையாற்றிய கண்ணகிகிராமம் கிராம அபிவிருத்திச் சங்க முக்கியஸ்தர்கள் தமது
கிராமத்தின் அபிவிருத்தியில் பிரதேச செயலாளருக்குள்ள அக்கறைக்கும், குறித்த
பார்வையாளர் அரங்கத்தை அமைத்துத்தர உதவியமைக்குத் தமது கிராம இளைஞர்கள் மற்றும்
பொதுமக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்தனர்.
இறுதியாக
இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில்
கிரிக்கெட், எல்லே மற்றும் கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற ஜொலி போய்ஸ்
அணியினரும், கரப்பந்தாட்டத்தில் வெற்றிபெற்ற இளம் பூக்கள் அணியினரும், அன்றையதினத்தில்
இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கனகர் அணியும் அதிதிகளிடமிருந்து
வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதிப்போட்டியை வென்ற உதயம் அணியினர்
பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனிடமிருந்து கிண்ணத்தைப் பரிசாகப் பெற்றதோடு சிறந்த
விளையாட்டு வீரருக்கான விருதை அவ்வணியின் ஈ.கபில் பெற்றுக்கொண்டார்.