சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை - அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்


இன்று சிறுவர்கள், பெண்கள், குறிப்பாகக் குழந்தைகள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது.  இது மனிதத்துவம் இல்லாமையினாலேயே எற்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தினால் 2015 ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஏ சித்திகளைப் பெற்ற 138 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்,

சமூகம் என்பது எதைச் செய்ய வேண்டும் எப்படிச் செய்யவேண்டம், எப்படி வழிப்படுத்த வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இன்றைய இந்த மாணவர்களுக்கான கௌவிப்பானது இருக்கின்றது. நாங்கள் கல்வியாளர்களை மாத்திரம் உருவாக்கவில்லை. அடுதததாக நல்ல மனிதர்களையும் உருவாக்குகின்றோம் என்ற செயற்பாட்டுக்கு சமூக விழிப்புணர்வு மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இன்றை இந்த உலகத்திலே நாம் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு விடயம் மனிதத்துவம். பணம் இருந்தால், வசதியிருந்தால், கல்வி இருந்தால், பட்டம் இருந்தால் எதையும் பெற்றுக் கொள்ளமுடியும். அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எதையும் நாம் பெறுவதற்கு இன்று தடைகள் குறைவாக இருக்கின்ற காலம்.
உலகில் எந்த நாட்டைப்பார்த்தாலும் இன்று எல்லோரும் தேடிக் கொண்டிருக்கின்ற விடயம் மனிதத்துவம், அந்த மனிதப்பண்பு, மனித நேயம், அதனூடாக நாங்கள் பார்க்கின்ற மனிதத்துவம், ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி நிற்கின்ற பாரம்பரியம், அதனுடைய பெறுமதி, விழுமியங்கள் இப்போது தேடப்படுகின்ற விடயமாகியிருக்கிறது.
இன்று இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், நாட்டின் பெயரால், பிரதேசததின் பெயரால் ஒருவரையொருவர் பழிவாங்கிக் கொண்டிருக்கின்ற, கொலை செய்து கொண்டிருக்கின்ற, அழித்துக் கொண்டிருக்கின்ற, அராஜகத்தின் பின்னணியில் அதிகாரப் போட்டியின் பின்னணியில் நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைச் சம்பவங்கள் இன்று மனிதத்துவத்தினைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
பல்வேறு போட்டிகளுக்கிடையில் இலங்கை போன்று அபிவிருத்தியடைந்துவரும் நாட்டில், சமூக பிரச்சினைகளுக்கும் இனங்களுக்கிடையே இருக்கின்ற முரண்பாடுகளுக்கும் இடையே, இந்த இளைய சமூதாயத்தினை வளர்த்தெடுத்து வடித்தெடுத்து சமூகத்தின் தலைமைச் சிறப்பு மிக்க தலைவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்தின் பால் இருக்கின்றது.
இன்று சிறுவர்கள், பெண்கள், குறிப்பாகக் குழந்தைகள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றவர்களாக, குழப்பங்களுக்குக் காரணமானவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் இந்தச் சமூகம் எங்கேபோய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எல்லோர் மத்தியிலும் எழுப்பியிருக்கிறது.
இங்கே பரிசில்களைப் பெற்ற மாணவர்கள் இந்த மாவட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற எதிர்காலத் தலைவர்கள் இந்த மாவட்டத்தின் முக்கியமான முடிவுகளை எடுக்கப் போகின்ற சமூகப் பொறுப்புள்ள கல்வியலாளர்கள், புலமையாளர்களாக மாற இருக்கின்றவர்கள். எனவே உங்களுடைய புலமையும், அறிவும், ஆற்றலும், இந்த மாவட்டத்திற்கு ஒரு நல்ல தலைவர்களாக. நல்ல வழிகாட்டிகளாகப் பரிணமிக்க வேண்டுமு; என்று எதிர்பார்க்கிறோம்.
ஏனென்றால் தலைமைத்துவம் சரியாக இருந்தால் இந்த மாவட்டம் இலங்கையில் மாத்திரமல்ல மட்டுமல்ல ஆசியாவினிலே தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய முல வளங்களைக் கொண்டிருக்கும் மாவட்டமாகும்.
எனவே இந்தஇளைஞர் சமூதாயம் தொடர்ந்தும் கௌரவங்கள் கிடைக்கின்றவர்களாக ஒவ்வொரு செயற்பாட்டுக்காகவும் பாராட்டப்பட வேண்டும்.
பல்கலைக்கழகம் செல்லவுள்ள நீங்கள், பல்கலைக்கழகம் என்பது வெறும் பட்டம் பெறும் இடமல்ல உங்களது திறமைகள் பரிணமிக்கப்பட்டு நல்ல பண்புகளை வளர்த்தெடுக்கக்கூடிய இடமாக அதை மாற்ற வேண்டும். தற்போது பல்கலைக்கழகம் செல்பவர்களின்; கல்வி நிறுத்தப்பட்டு குழப்பம் உண்டுபண்ணக் கூடிய சமூகமாக தற்போது பல்கலைக் கழகங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கையின் பாரம்பரிய பல்கலைக்கழகமான பேராதனை உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பரீட்சை பின்போடப்படுகின்றது, மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் வைத்து வெளியேற்றப்படுவது, மாணவர்கள் இடைநிறுத்தப்படுவது உள்ளிட்ட கல்வியை தடைசெய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பாரம்பரியத்தை தேடிக்கொண்டிருக்கின்றார்கள் கல்வி கற்கப்போகும் மாணவர்கள் அவர்களது பாரம்பரியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பது கவலையளிக்கின்றது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தரிசனம் வழிப்புலனற்ற பாடசாலையில் சித்தி பெற்ற 5 மாணவர்கள், மாவட்டத்தில் 5 பாடங்களில் முதலிடத்தைப் பெற்ற 5 மாணவர்கள், தேசிய மட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவி ஒருவரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியக் கலாநிதிகளான சித்திரா கடம்பநாதன், திருமதி நவரட்ணராஜா, திருக்குமரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், இறைவரித்திணைக்கள வடகிழக்கு மாகாண ஆணையாளர் சட்டத்தரணி எம். கணேசராஜா ஆகியோர் வாழ்த்துமடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.