மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழாவில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் முதலிடம்

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட விளையாட்டு விழாவில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் 152 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்தினையும், 122 புள்ளிகள் பெற்று மண்முனை வடக்கு இரண்டாவது இடத்தினையும் பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்..சார்ள்ஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.


விசேட அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி  என்.சத்தியானந்தி மற்றும் உதவிப்பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் 38 புள்ளிகளைப் பெற்று கோரளைப்பற்று தெற்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் 3ஆம் இடத்தினைப் பெற்றன.

உதைபந்தாட்டம், கிரிகட், எல்லே, கபடி, கரப்பந்து, கூடைப்பந்து, கராத்தே, ரேபிள் ரெனிஸ், பூப்பந்து, கொக்கி, தடகளப் போட்டிகள் அத்துடன், புதிதாக தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன













.