மாவட்ட செலயலாளரது அலுவலகத்தில் சம்பியன் கிண்ணம் அணியின் தலைவர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சனால் கையளிக்கப்பட்டபோது அணி வீரர்களும், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காள் எஸ்.நேசராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மூன்றாவது வருடமாக நடாத்தப்பட்ட பிரதேச செயலாளர் சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி சம்பியனானது.
ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் மைதானத்தில் மூன்று நாட்கள் இடம்பெற்ற போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டி 22ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் நிறைவு பெற்றது.
மாவட்ட செயலக அணி உட்பட 13 பிரதேச செயலக அணிகள் பங்குகொண்ட இப் போட்டியில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அணியினருக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினருக்குமிடையே இறுதிப் போட்டிக்கான மோதல் இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் 10 ஓவர் முடிவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அணியினர் ஓவர்முடிவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றது.
இப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிபெற்று சம்பியனாகியது. கடந்த வருடம் இடம்பெற்ற பிரதேச செயலாளர் சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலும் இவ்வணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியின் இறுதி நிகழ்வில், அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜா, ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் வை.லட்சுமிஹரன் போன்றோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.