(கோபி) வாகரையில் அழகிய பசுமைக் கிராமங்களை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 27.10.2016 நடைபெற்றது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் சுற்றறிக்கை இல: 02/2016 இன் பிரகாரம் பச்சை பசேலென்ற அழகிய கிராமங்களை அபிவிருத்தி செய்தல் எனும் நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப நிகழ்வு இன்று மு.ப. 11.00 மணியளவில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிரிமிச்சை கிராம சேவகர் பிரிவின் பாலையடியோடை கிராமத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் வேள்விசன் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வாகரை வேளட்விசன் நிறுவனத்தின் முகாமையாளர், வட்டார வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர், கிராமசேவகர், வேள்ட்விசன் நிறவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி S.R. ராகுலநாயகி அவர்கள், பசுமைக் கிராமங்களை உருவாக்கல் எனும் செயற்றிட்டத்தின் எண்ணக்கரு கடந்த 02 வருடங்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தில் உருவானது. அதனை 16 கிராம சேவகர் பிரிவில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் 'கிராமிய காடு' எனும் பெயரில் எனக்கு திட்ட முன்மொழிவாக சமர்ப்பித்திருந்தனர்.
அதேவேளை இந்த வருடம் நடுப்பகுதியில் மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் சுற்றறிக்கை இல: 02/2016 மூலம் பச்சை பசேலென்ற அழகிய இலங்கை கிராமங்களை அபிவிருத்தி செய்தல் எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அதனையும் உள்வாங்கி இந்த மரநடுகை திட்டம் வேள்ட்விசன் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இன்று நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதே போன்று எமது பிரிவில் உள்ள ஏனைய 15 கிராம சேவகர் பிரிவுகளிலும் பசுமை கிராமம் என்ற திட்டத்தின் கீழ் மரநடுகை செய்யப்பட்டு காடுகள் உருவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான காணிகள் கிராம சேவகர்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பிரதேச செயலாளர் தமது உரையில் தெரிவித்தார்.
எமது எதிர்கால சந்ததியினருக்கு காடுகளின் முக்கியத்துவம் தெரியாத அளவிற்கு காடுகள் விவசாயம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பசுமைக் கிராமம் எனும் இத் திட்டத்தின் மூலம் காடுகளின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தற்போது இங்கு நடுகை செய்யப்படுகின்ற மரங்களை இப்பகுதி மக்களே பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார்.
பிரதேச செயலாளிரின் உரையினைத் தொடர்ந்து, பசுமைக் கிராமத்திற்கென பாலையடியோடை கிராமத்தில் அடையாளப்படுத்தப்பட்ட காணியில் தெரிவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் அதிதிகளால் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
