அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகின்றது

அரசியல் என்பது அனைத்து துறைகளுக்கும் தேவை ஆனால் பாடசாலையை பொறுத்தவரையில் உள்ளக நிர்வாகங்களையும் பாடசாலை சமூகத்தினையும் குழப்புகின்ற அரசியல்வாதிகள் எங்களிடத்தே தேவையில்லை என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கற்கை வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(13) பாடசாலை அதிபர் கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 1208 தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளும், 17 கல்வி வலயங்களும் அமைந்துள்ளது.

அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் 7 கல்வி வலயமும், திருகோணமலை மாவட்டத்தில் 5 கல்வி வலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயமுமாக 17 கல்வி வலயங்கள் அமையப்பெற்றுள்ளது.

இந்த 17 கல்வி வலயங்களில் பெரும்பாலானவை நகர்ப்புறங்களை அண்டியதாக காணப்படுவதனால் அந்த வலயங்களில் உள்ள பாடசாலைகள் ஓரளவு அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றது ஆனால் வளங்களை பொறுத்தவரையில் அனைத்து பாடசாலைகளிலும் வளப்பற்றாக்குறை என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக இந்தப்பிரதேசத்தினை பொறுத்தவரையில் போர்ச்சூழலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். அதன்காரணமாக பாடசாலைகள் அனைத்திற்கும் போதியளவு வளங்கள் தேவையாகவே இருக்கின்றது.

என்பதனை உணரமுடிகின்றது குறிப்பாக தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் 103 அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானது பின்தங்கிய பிரதேசங்களை மையப்படுத்தியதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அமைத்ததன் நோக்கம் தொழிநுட்ப அறிவை பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள மாணவர்களும் அறிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அரசியலை பொறுத்தவரையில் அதன் தேவைப்பாடு அனைத்து துறைகளுக்கும் பொறுத்தமுடையதாகவே அமைந்திருக்கின்றது.

ஆனால் பாடசாலையை பொறுத்தவரையில் உள்ளக நிர்வாக கட்டமைப்பிலும், பாடசாலை சமூக கட்டமைப்பிலும் அரசியலை பிரயோகப்படுத்துவதென்பது பொருத்தமுடையதாக இருக்காது என்பதனை அனைத்து அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் போர்ச்சூழல் காரணமாக பல்வேறு நிர்வாக கட்டமைப்புக்கள் குழைந்து போயுள்ள மாகாணம்.

அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம். போர் காரணமாக பல அழிவுகளையும், இழப்புக்களையும் சந்தித்த ஒரு பிரதேசம் இங்கு பல தேவைகள் இருக்கின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது.

அதனை செய்து தருவதற்கான பொறுப்பினை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்துதருவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.