இனவாதத்தையும் மதவாதத்தையும் அள்ளி வீசாமல் தமிழ் பேசும் இனம் என்ற எண்ணக்கருவோடு உங்களது செயற்பாடு இருக்க வேண்டும்

துறையூர் தாஸன்
நல்லாட்சி அரசாங்கம் எல்லா மக்களுக்கும் சமத்துவமான ஒரு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அதிகாரப் பகிர்வை தரவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

 திருக்கோவில்  ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு கையளித்தல்   நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் ப.மோகனகாந்தன் தலைமையில் இடம்பெற்ற போது,அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்திலே அதிகளவான பாதிப்பு ஏற்படுத்தப்பட்ட பிரதேசமாக திருக்கோவில் பிரதேசம் இருக்கிறது.யுத்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டதொரு வைத்தியசாலையாக இவ் வைத்தியசாலை இருக்கிறது.இவ் வைத்தியசாலை கடந்த யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருந்த படியினால் இவ் வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் பல தடங்கல்கள் ஏற்பட்டிருந்தது.இப்பொழுது நல்லாட்சியிலே இவ் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டிருக்கின்றது.

பொறுப்புள்ள அதிகாரிகள் எமது மக்களுக்கு, எமது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளை தரமுயர்த்தி வைத்தியசாலைக்குத் தேவையான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர அதனை தடுப்பவர்களாக இருக்ககூடாது.

மக்கள் படுகின்ற துன்ப துயர அவல வேதனைகளை கருத்திற்கொண்டு மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயற்படுபவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தையும் மதவாதத்தையும் அள்ளி வீசாமல் ஓரே மக்கள் ஒரே இனம், தமிழ் பேசும் இனம் என்ற எண்ணக்கருவோடு உங்களது செயற்பாடு இருக்க வேண்டும்.பொறுப்பற்று செயற்பாடாமல் எல்லா மக்களுக்கும் ஒரே விதத்தில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.அபிவிருத்தி  என்பது யாவருக்கும் எட்டப்படவேண்டும் என்ற செயற்பாட்டிலே நீங்கள் இறங்க வேண்டும்.

இந்த நாட்டிலே இன்று இடம்பெறுகின்ற அதிகாரப் பகிர்வை எடுத்துக்கொண்டால், அதிகாரப் பகிர்வு எட்டப்படுகின்ற சந்தர்ப்பத்திலும் கூட அதனை எதிர்க்கின்ற ஒரு கூட்டம் ஒரு அமைப்பினர் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.அதனை தடுத்து நிறுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுத்தான் இருக்கின்றார்கள்.
தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு சுய நிர்ணய தீர்வு ஒரு அதிகாரப் பகிர்வு கிடைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து செயற்படுகின்றார்கள் என்றார்.