
சர்வதேச சிறுவர் தின, முதியோர் தினத்தைச் சிறப்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னெடுப்புடன் கடந்த திங்கள் 02.10.2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை 09.10.2017 காலை 07.30 மணிக்கு வித்தியாலயத்தின் அதிபர் திரு.த.அருமைத்துரை அவர்களின் தலைமையில் பாடசாலை நடைபெற்றது.
இன்றைய நாளில் மரம் நடுவோம் சுற்றாடலை பேணுவோம் என்கின்ற பேண்தகு பாடசாலையின் கருப்பொருளில் விழிப்புணர்வு செயற்றிட்டம் நடைபெற்றது. மேலும் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் 72 ஆம் ஆண்டு பாடசாலை தினத்தை சிறப்பிக்கும் முகமாக 72 மரக்கன்றுகளை நடும் திட்டமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பழைய மாணவ சங்க நிர்வாக குழு மற்றும் பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வை சிரேஷ்ட ஆசிரியை திருமதி சு. ஞானப்பிரகாசம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அதிபர் திரு. த. அருமைத்துரை அவர்களின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு ஆரம்பமான நிகழ்வில் மரம் நடுவோம் சுற்றாடலை பேணுவோம் என்கின்ற தலைப்பில் உரையாற்றிய திரு யோ.ருஷாந்தன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். மரத்தினால் உண்டாகும் நன்மைகள், இச்சூழலுக்கான மரத்தின் தேவைகள் என்பது பற்றி விளக்கமளித்தார்.
மரம் நடுவோம் சுற்றாடலை பேணுவோம் தொடர்பான சாராம்ச உரையை பழைய மாணவர் சங்க போஷகரும் முன்னாள் ஆசிரியருமான திரு. யு. யோகராஜா அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக பழைய மாணவர் சங்கத்தின் அணுசரனையுடன் 21 மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டது. இவ்வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்ட முன்னெடுப்புகள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பழைய மாணவர் சங்கத்தினால் ஐந்து கருப்பொருட்களில் 5000 கொடிகள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பத்து மாதங்களுக்குள் பல்வேறுபட்ட பாடசாலை நலன்சார் நிகழ்வுகளை முன்னெடுததுச் செல்லும் பாதையில் இந்நிகழ்வானது மாணவர் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.