விழுமியம் என்பது தனிநபர்; சமூகம்; வாழ்க்கை என்பவற்றை வளப்படுத்தி அதனை அர்த்தமுள்ளதாக மாற்றும் குணநல பண்பாகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனித விழுமியங்களான அன்பு, தைரியம், ஒழுக்கம், அகிம்சை, அறம் செய்தல், சமாதானம், நேர்மை என இன்னும் பல மனித விழுமியங்கள் இருத்தல் அவசியமாகும். இன்றைய நவீன உலகில் அனைத்து விடயங்களும் தொழிட்பத்தின் அதீத வளர்ச்சியினால் உள்ளம் கைக்குள் சுருங்கி விட்டது. அவ்வாறனதொரு நிலையில் தற்போது அதிகமாக பேசப்படும் விடயம் தனிமனித விழுமியமாகும்.
ஒரு குழந்தை பிறந்ததும் அக் குழந்தைக்கு விழுமியத்தை போதிப்பது அக் குழந்தையின் பெற்றோர் சுற்றுப்புறச்சூழல் இயற்கை நிகழ்வுகளுமாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக் குழந்தை இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் தனது மழலை மொழிமூம் அறிகிறது. இயற்கையின் ஒவ்வொரு விடயங்களையும் இரசிக்கின்றது.
தன்னை சுற்றியுள்ளவர்கள் பேசுகின்ற செயற்பாடுகள் அனைத்தையும் கூர்மையாக கவனிக்கின்றது. இவ்வாறு ஒரு குழந்தை பிள்ளைப்பருவத்தில் விழுமியக் கல்வியைக் கற்று தனது ஐந்து அல்லது ஆறுவயதாகும்போது ஒரு மாணவராக தனது பாடசாலைக் கல்வியை தொடர்கின்றது. அங்கு தனது விழுமியக்கல்வியை சிறப்பாக தொடர்வதற்கு 'இளமையில் கல்வி சிலையில் எழுத்து' என்ற முதுமொழிக்கிணங்க அவன் குழந்தைப் பருவத்தில் கற்ற விழுமியமானது அக் குழந்தை பாடசாலையிலும் விழுமியக் கல்வியை தொடர்வதற்கு பெரிதும் உதவி புரிகின்றது.
மாணவராக பாடசாலை சென்றதும் அவனுக்கு பெற்றோர், தெய்வம் எல்லாம் கல்வியை போதிக்கும் ஆசிரியராவார். ஆசிரியர் மாணவரது உறவானது தந்தை மகன் உறவைப் போன்று இரத்தமும் சதையுமாக பிண்ணிப்பினைகின்றது. பாடசாலையில் அறிந்தவர் - அறியாதவர் என்ற நிலையில் ஆசிரியர் மாணவர் உறவு காணப்படும். அதாவது இருள் நிறைந்த நிலையில் காணப்படும மாணவர் மனதில் அறிவு எனும் ஒளியைப் புகட்டி இவ்வுலகிற்கு அறிவு, திறன், மனப்பாங்கு என்பன விருத்தி பெற்று சிறந்த விழுமியப் பண்புள்ள நற்பிரஜையை உருவாக்குபவராக ஆசிரியர் காணப்படுவார். ஒரு மாணவரது மனதில் விழுமியக் கல்வியை புகட்டுவதில் ஆசிரியர் மட்டுமல்லாது பாடசாலை முதல்வர் பகுதி தலைவர்கள் சக மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என அனைவரது நடவடிக்கைகளையும் பார்த்தே ஒரு மாணவர் சிறந்த முறையில் வழுமியக் கல்வியை பெறுகின்றார்.
பண்டைய காலத்தை எடுத்துக் கொண்டால் ஒரு மாணவர் தனது ஐந்து வயதளவில் பெற்றோர் உறவினர்களை பிரிந்து குருகுலம் சென்று குருகுலக் கல்வியை பெறுகிறான் அங்கு குரு தந்தையாகவும் குரு மாதா தாயாகவும் இருந்து அவரை வழிநடத்துவார்கள். அங்கு குருவால் அனைவருக்கும் எவ்வித பாகுபாடின்றி கல்வி போதிக்கப்படும். அக்காலத்தில் ஒழுக்க கல்வியே சிறப்பாக போதிக்கப்பட்டது.
அதன் மூலம் மாணவர்கள் உலக அறிவோடு சேர்ந்து விழுமியக் கல்வியையும் சிறப்பாக கற்றனர். இங்கு குருவை மதித்தல், குருவிற்கு பணிவிடை செய்தல் சகோதரத்துவம் பகிர்ந்துண்ணல். சத்தியம் உண்மை நீதி போன்ற விழுமியப் பண்புகள் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்காலத்தில் மாணவர் மத்தியில் விழுமியப் பண்பு நிறைந்து காணப்படுகின்றதா? என்ற வினாவைக் கேட்டால் சரியான பதில் கிடைப்பது என்பது சந்தேகம்தான்.
தற்போது குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை அக்குழந்தைக்கு சிறந்த முறையில் விழுமியக்கல்வி போதிக்கப்படுவதில்லை. தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் வர்ததகமாக்கப்பட்டதால் பணம் என்பதையே குறிக்கோளாக கொண்டு சமூகம் அலைந்து திரிவதனால் மனிதர்களிடையே போட்டி பொறாமை சண்டை சச்சரவு என்ற மிருகக்குணங்கள் வலுப்பெற்றுவிட்டது. இதனைப்பார்தது வளரும் குழந்தைகள் கூட அவ்வாறான மனப்பாங்குடனே வளர்கின்றன. இதன் மூலம் மாணவர் மத்தியில் கொலை, கொள்ளை பொய், மோசடி, பாலியல் வன்முறை, ஆள் கடத்தல், அச்சுறுத்தல் என்பன தொடர்ந்து கொண்டே போகின்றது இதற்கு காரணம் மனித விழுமியம் எம்மை விட்டு விலகியமையே ஆகும்.
முன்னர் ஆசிரியர் மாணவர் உறவு தெய்வீக நிலையில் காணப்பட்டது.
தற்போது எடுத்துக்கொண்டால் ;எல்லாம் தலைகீழாகவே காணப்படுகின்றது. பணம் இல்லா விட்டால் ஒரு மாணவர் கற்க முடியாத நிலை காணப்படுகின்றது. உதாணரமாக எமது நாட்டில் உள்ள உயர் பாடசாலைகளில் ஒரு மாணவன் கல்வியை கற்க வேண்டுமானால் பாடசாலை நிர்வாகமானது அவனது தகமைகள் ஒழுக்கங்களை கண்டுகொள்ளாமல் முதலில் அம் மாணவர்களின் பெற்றோர்களிடம் வினாவப்படுவது இப்பாடசாலை விருத்தி பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு தரப்போகின்றீர்கள் என்று பாடசாலை நிர்வாக்தினால் கல்வி விலை பேசப்படுகின்றது.
இவ்வாறு அரசியலினைப் போன்று கல்வியிலும் ஊழல் நடந்து கல்வியும் வர்த்தகமாக மாறிவிட்டதனை காணமுடிகின்றது. இவ்வாறு ஆரம்பத்திலே மாணவர் மத்தியில் நஞ்சை விதைப்பதால் எவ்வாறு அம் மாணவன் விழுமியக் கல்வியை கற்று சிறந்த பிரஜையாக திகழமுடியும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
இதையும் தாண்டி பாடசாலைக்குச் சென்றால் அங்கு ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு சாதி மத வேறுபாடு மற்றும் மாணவர் முன்னிலையில் ஆசிரியர் புகைத்தல் வெற்றிலை என்பவற்றை செய்கின்றனர். இதன் மூலம் அம் மாணவர்களும் ஆசிரியர்களின் வழியிலே செல்வதை காணமுடிகின்றது. தற்போது சில பாடசாலை மாணவர்கள் பகிரங்கமாகவே புகைத்தல், மது அருந்துதல், சண்டை சச்சரவுகள், சினிமா மோகம், தீய செயல்கள், பாலியல் செயற்பாடுகள், பகிடிவதை போன்றவற்றில் ஈடுபடுவதை அவதானிக்கலாம். ஆகையால் அவசரமாக மாணவர் மத்தியில் சமத்துவம் சகோதரத்துவம் சனனாயகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்தல் பிறர் உரிமைகளை மதித்தல் போன்ற சிறந்த விழுமியங்களை மாணவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய தேவை அவசிமாகும்.
கிரேக்க மெய்யியளாளரான பிளேட்டோ என்பவர் 'கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மை யாதெனில் நல்ல மனிதர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் பழக்குவதாகும்' அதன் மூலம் வழுமியக் கல்வியே பிரயோக பயனுடையதாக பிளேட்டோ மாற்றமுனைகிறார். இவரது கருத்தின்படி அதனை கோட்பாட்டு வடிவத்திலும் செயற்பாட்டு வடிவத்திலும் நிறைவேற்ற வேண்டிய பெரும் பாத்திரம் பாடசாலை என்பதை எமக்குஉணர்த்துகிறது. ஒருவன் மனதில் சிறப்பான எண்ணத்தை ஒருவாக்கும் மனித நேயம் பெரியோரை மதித்தல் உணர்ச்சி கட்டுப்பாடு நேர்மை நன் மனப்பான்மை பணிவு சுய திறன் மகிழ்ச்சி உண்மை என அனைத்தும் மாணவர் மனதில் சிறப்பான விழுமியக் கல்வியை போதிக்கின்றது. இதன் மூலம் மாணவனது அறிவு திறன் மனப்பாங்கு வளர்ச்சி பெற்று சிறந்த ஆளுமையை பெறுகின்றான்.
ஒருவன் நிறந்த விழுமியக் கல்வியைப் பெறுவதன் மூலம் இவ்வுலகையே ஆள முடியும் உதாரணமாக உலகில் நாம் வியந்து போற்றும் பெரியார்களான மகாத்மா காந்தி, அன்னை தெரேசா, ஆபிரகாம்லிங்கன,; அப்துல்கலாம், ஜவர்கல்லா நேரு போன்றவர்கள் எவ்வாறு கல்வியில் சிறந்து விளங்pனார்களோ அவ்வாறே தமது சிறந்த விழுமியப்பண்புகள் மூலம் உலகே வியந்து போற்றும் அளவிற்கு சிறப்பினைப் பெற்றனர். ஆகவே ஒரு மாணவனுக்கு எந்தளவிற்கு அனுபவ கல்வி அவசியமோ அதேயளவிற்கு விழுமியக் கல்வி அவசியம் என்பதனை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஒரு பிள்ளை வளர்ந்து பூரண மனிதராவதற்கு ஐந்து வளர்ச்சிகள் இடம்பெற வேண்டும். அவையாவன
1. அறிவு வளர்ச்சி
2. உடல் வளர்ச்சி
3. உணர்வு வளர்ச்சி
4. அன்பு வளர்ச்சி
5. ஆத்மீக வளர்ச்சி
இவை முழுவதிலும் விழுமியம் தொடர்புபடுகிறது. இந்த ஐந்து வளர்ச்சிகளையும் கல்வியினால் பெறுகிள்ற போது மாணவனது ஆளுமை சிறக்கின்றது.
உலகில் உள்ள அனைத்து மதக்கொள்கைகளையும் எடுத்துக் கொண்டால் அனைத்து மதமும் ஒழுக்க விழுமியத்திற்கு சிறப்புரிமை கொடுப்பதை காண முடிகின்றது. இந்துக்கள் வேத ஆகமம், கிறிஸ்தவர்கள் பைபிள் இஸ்லாமியர்கள் திருக்குர் ஆன், பௌத்தர் திரிபீடகம் என அனைத்து மத புனித நூல்களும் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டிய மனித விழுமியங்களை சிறப்பாக போதிக்கின்றன. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையிந் தெய்வத்துள் வைக்கப்படுவான்', 'ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரனும் ஓம்பப்படும்' போன்ற சான்றோர் வாக்குகளின் மூலமும் நாம் ஒழுக்க கல்வியின் சிறப்பை அறிய முடியும். சான்றோர்களால் எழுதப்பட்ட விழுமியங்கள் சம்மந்தமான நூல்கள் கூற்றுக்கள் என்பன அவர்கள் அக் காலத்தை மட்டும் கருத்திற் கொண்டு எழுதவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களால் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்தக்களும் இக் காலம் மட்டுமின்றி எக் காலத்திலும் ஒரு மனிதனை பூரணமான ஒழுக்க விழுமியம் உள்ள மனிதனாக மாற்ற வல்ல கருத்துக்கள் என்பதை நாம் அறிய முடியும்.
பண்டைய நூல்களான திருக்குறள், ஆத்திசூடி, பழமொழி நானூறு, நன்னெறி என இன்னும் பல நூல்களும் மனிதனுக்கு சிறந்த முறையில் விழுமியக் கல்வியை போதிப்பனவாக உள்ளன. சோக்கிரட்டிஸ் என்ற மெய்யியலாளர் விழுமியங்களை ஒழுக்கத்துடன் இணைத்து அதுவே அறிவு என்றார். (virtue is know iedge) அதாவது 'அறிவே ஒழுக்கம் என்றார்.' இஇதைப்போலவே இன்றைய கல்வியும் விழுமியங்களுடன் இணைந்து கற்பிக்கப்படும் போது மாணவர்களிடையே மனிதம் போற்றப்படும்.
இன்றைய பாடசாலை பரீட்சைகளை எடுத்துக் கொண்டார் பாட ரீதியாகவே நடைபெறுகறது. அப்பரீட்சை வினாக்களில் நேரடியாக விழுமியம் சம்மந்தமாக பரீட்சிக்கப்படுவதில்லை. இது மாணவர்களின் கற்றலில் விழுமியக்கல்வியின் அவசியத்தை குறைத்துள்ளது. இது தவிர இன்றைய கல்விமுறையில் விழுமியக் கல்வியை மாணவர்களிடையே ஏனைய பாடங்களை பிரதான பாடங்களை கற்பிப்பது போல பரீட்சிப்பது போல மதிப்பீட்டு நிர்வாக அதிகாரிகள் செயற்படுவது போல செயற்படுவதில்லை. இதன் மூலம் மாணவர்களிடையே விழுமியம் குறைவடைந்துள்ளது.
மாணவர்களிடையே விழுமியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். ஆசிரியரானவர் விழுமியம் பற்றி வெறுமனே வகுப்பறையில் மட்டும் பேசுவதோடு நின்று விடாமல் தனது வாழ்விலும் எடுத்து நடக்க வேண்டும். தன்னால் முடியாத விழுமியத்தை மாணவர்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துவமு ஆசிரியரின் மிகப் பெரிய தவறாகும். ஆசிரியரானவர் முழுமையான மன வளர்ச்சி, சமுதாய அக்கறை, தேசிய நலன், உலக மனப்பான்மை, விழிப்புனர்வு போன்ற உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டவராக இருத்தல் அவசியம்.
அப்போதுதான் மாணவர்களிடையே சிறந்த விழுமியக் கல்வியை போதிக்க முடியும்.
மனித விழுமியங்களின் உற்பத்திதளம் மனித உள்ளங்களாகும். இதனால்தான் சோக்ரட்டீஸ் 'மனிதன் யாருமே தவறுசெய்வதில்லை தவறுசெய்யக்காரணம் அவன் சரி பிழை பற்றி அறிந்திராததே காரணம் என்றார்.' இதன்படி ஒழுக்கவியலில் விழுமியம் செயற்பட அறிவு ஒன்று அவசியம் என்பதை உணர்த்துகிறது. மேலத்தேயத்தில் இதனை முதலில் வழியுத்தியவர். சோக்ரட்டிஸ் என்பதால் ஒழுக்கவியலின் தந்தை எனப்படுகின்றார்.
பாடசாலையில் நல்ல மாணவர்களை உருவாக்காவிட்டால் நல்ல பிரஜைகள் இல்லை அதனால் கலாச்சார சீரழிவு சமூக ஒற்றுமை,சமூக நீதி என்பன இருக்காது எதிர்கால சவாலுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது.
எனவே இவ் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சிறந்த விழுமியத்துடன் கூடிய நற்பிரஜைகளை உருவாக்க வேண்டியது ஒவ்வொறு பெற்றோர்,ஆசிரியர் சமூகம் என அனைவரது கடைமையாகும். ஆனால் இந் நிலை கேள்விக்குரியதாகியுள்ளது.(1997) தொம்லிக்சஸன் செய்த ஆய்வின், விழுமியம் தொடர்பாக பாடசாலை ஒழுக்கத்தை முன்னேற்றுவதற்கு பெற்றோறுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் மிக குறைவு எனக்கூறுகின்றார்.
தற்பொழுது அனைத்து பெற்றோர்களையும் எடுத்துக்கொண்டால் அனைவரும் பணம்தான் எனத்திரிகின்றனர். தன்னுடைபிள்ளைகள் பொறியியளாளர்,வைத்தியர் என உயர் பதவிகளைப்பெற்று சிறப்பான முறையில் பணம் சம்பாதிக்கவேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. தம் பிள்ளை பெரிய பதவியில் உள்ளார் என்ற கர்வம் மட்டுமே கொள்கின்றனர். விழுமியத்தை போதிப்பதில்லை இதனால் எவ்வளவோ உயர்ந்த இடத்தில் இருந்தாலும் சிறந்த விழுமியம் இல்லாவிட்டால் அவனது வாழ்க்கை பூச்சியம் என்பதை உணர்வதில்லை.
எனவே விழுமியக்கல்வியின் சிறப்பை சிறுப்பிராயத்தில் இருந்து குழந்தைகளுக்கு போதித்து சிறந்த விழுமியம் ஆளுமையுடன் வாழ்வதற்கு வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கு ஆசிரியரை மதித்து நடக்க வீட்டில் பெற்றோரைப் பேணிப்பாதுகாக்க சமூகத்தில் சிறந்த பிறஜையாக நாட்டிற்கு சிறந்த குடிமகனாக உருவாக்க விழுமியக்கல்வி அவசியம். எனவே பெற்றோர் பாடசாலை சமூகம் மூத்தோர் என்போர்கள் விழுமிக்கல்வியின் அவசியத்தை பிள்ளைகளுக்கு போதிப்பதுடன் பாடசாலைகள் பல்கலை
கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்கள் என்பவற்றின் விழுமியக்கல்வியை தனிப்பாட விதானமாக செயற்படுத்துவதன் மூலம் விழுமியக்கல்வியின் வீழ்சியைத்தடுத்து மாணவர்கள் மத்தியில்சிறந்த முறையில் விழுமியத்தைப்பேர்தித்து நாட்டிட்கும் இவ்வுலகிற்கும் ஏற்ற பிள்ளைகளை உருவாக்க முடியும்.
யோ.நிஜிதன்
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைகழகம்.