
மட்டக்களப்பு புளியந்தீவு சல்லிப்பிட்டி பிரதேச மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக அமைந்த காணிப்பதிவு தொடர்பான விடயங்களை ஆராயும் முகமாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.
சல்லிப்பிட்டிப் பொதுமக்கள் மற்றும் ஞான வைரவர் ஆலய நிர்வாக சபையினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையாக அமைந்த இவ்விடயத்தினை நடைமுறைப்படுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மாநகர முதல்வரின் இக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட காணி உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்வரன் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் க.ஞானப்பிரகாசம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவ்விஜயத்தின் போது அப்பிரதேச மக்களின் நீண்ட காலஎதிர்பார்ப்பிற்கு சாதகமான பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டதுடன், அம்மக்களின் காணிப்பதிவு விடயத்தை விரைவில் பூர்த்தி செய்து தருவதாகவும் இதன் போது மாநகர முதல்வர்உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.