குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு நகரில் நாளை இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தாம் மட்டக்களப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளன.
இதனால் சகல அஞ்சல்துறை பணியாளர்களையும் மட்டக்களப்பு பிரதான அஞ்சலகத்தின் முன்னால் திங்கட்கிழமை காலை 8.45 மணிக்கு வருகை தந்து கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு சங்கம் கேட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராதான அஞ்சலகத்திற்கு முன்னால் தொடங்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் காரியாலயத்திற்குச் சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு.
5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்.
கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்.
ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த அமைச்சரவை பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு.
2012 பொறுப்புப் பரீட்சையை நடைமுறைப்படுத்து.
பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்கு.
விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு.
பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என். 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு என்பனவற்றுடன் மேலும் அரசாங்கத்தின் மூடிய திணைக்கள ஆட்சேர்ப்பு முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் கடந்த 12ஆம் திகதியிலிருந்து நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.