மண்முனை படுவான்கரை வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்! பாதிக்கப்படும் மக்கள்! அலட்சியத்தில் அதிகாரிகள்!



படுவான்கரை என்பதுதான் மட்டக்களப்பு மண்ணின் மண்வாசனை, இந்த படுவான்கரை பிரதேசத்தையும் மட்டக்களப்பு நகரினையும் இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதுதான்  மண்முனைப் பாலத்தின் ஊடான கொக்கட்டிச்சோலை - மாவடி முன்மாரி வீதி. இங்குள்ள பல கிராமங்களையும், கொக்கட்டிச்சோலை நகரத்தையும் பல இலட்சக்கணக்கான மக்கள் சென்றடையவும், அங்குள்ள மக்கள் வெளி இடங்களுக்கு பிரவேசிக்கவும் இவ் வீதியையே பயன்படுத்துகின்றனர்.

பல தேவைகளுக்கான பிரதான பாதையாக இருக்கும் இவ் வீதியில் பல பாரிய பள்ளங்கள் ஏற்பட்டு பாவனைக்கு உதவாத மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இங்கு மகிழடித்தீவு கிராமத்தில் அமைந்துள்ள வைத்திய சாலையில் மக்கள் சிகிச்சைக்காக  சென்று மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆம்புலன்ஸ் வண்டியானது இப் பாதையின் ஊடாகவே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

விவசாயத்தை பிரதான சீவநோபாயமாகக் கொண்ட படுவான்கரை மக்கள் யுத்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டனர், மண்முனைத் துறை ஊடாக ஆற்றினை ஓடத்தின் (பாதை) வழியாகக் கடந்த மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது மண்முனை பாலம், இதனால் போக்கவரத்துக்கள் இலகுவாக்கப்பட்டு பேரூந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இப் பிரதேசத்தின் கொக்கட்டிசோலை ஒரு வளர்ச்சியடைந்து வரும் நகரமாக மாறி வருகின்றது. வங்கிகள், வியாபார நிலையங்கள், அரச அலுவலகங்கள், கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உட்பட பிரதானமான பல தலங்கள் படுவான்கரையில் அமைத்துள்ளது. இவற்றுக்கு பயணிக்கும் மக்கள், அலுவலர்கள் இவ் வழியாகவே பயணிக்கின்றனர்.



குன்றும் குழியுமாக காணப்படும் இவ் வீதிக்கு சில காலங்களில் பசளை தூவுவது போன்று கற்களையோ அல்லது கிறவலையோ  இட்டு விட்டு அபிவிருத்தி என்கின்றனர், இதனால் மீண்டும் இப்பாதை சேதமடைகின்றது, பெரும்பாலும் மணல் ஏற்றிச் செல்லும் பார ஊர்திகளே இவ் வீதி வழியாக அதிகம் உலா வருகின்றன. இதனாலும் அதிகம் பள்ளங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

பிரதான பாதையாக அமைந்துள்ள இவ் வழியில் பயணிக்கையில் பள்ளங்களின் காரணமாக வாகனங்கள் எதிர் வழியாகவும், முந்திச்சென்று  பயணிக்கவும்  நேரிடுகின்றது, இதானால் அதிக விபத்துக்களும் ஏற்ப்படுகின்றன, சிறிய மழை பெய்தவுடனையே குட்டைகளில் நீர் தேங்கி விடுகின்றது, இதனால் அப் பாதையும் பாதிக்கப்பட்டு, சேறு நீர் தெறித்து பயணிகளும் அவர்களது வாகனங்களும் பாதிப்படைகின்றன.

பாலத்தை அடுத்து மகிழடித்தீவு சந்தி வரையான பாதையில் மக்கள் குடியிருப்புகள் இல்லாமையால் பாதுகாப்பு அற்ற நிலை அதிகம், முக்கியமாக இரவு நேரங்களில் பயணிக்கையில் இவ் வீதியின் பள்ளங்களில் பயணிகள் விழுவதும் உண்டு, குறிப்பாக பெண்கள், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்,



இரவு வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவான மரங்களால் சூழப்பட்ட இவ் வீதிக்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டியது கட்டாயமாகும், மாடுகளின் நடமாட்டமும் அதிகம் காணப்படுவதால் விபத்துக்களை தவிர்க்க மின் விளக்குகள் அவசியம் அமைக்க வேண்டும்.

மண்முனை தென் மேற்கு பிரதேச பிரிவுக்குட்டப்பட இப் பாதையினை பிரதேச சபைத் தவிசாளர் கவனத்தில் எடுக்க வேண்டியது கட்டாயமாகும், தாந்தாமலை முருகன் ஆலயம் வரை செல்லக்கூடிய  இவ் வீதியை செப்பனிட்டு முதல் நிலை காபட் பாதையாக மாற்ற வீதி அபிவிருத்தி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

பாலத்தினை அடுத்து சதுப்பு நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இவ் வீதிக்கு முறையான பொறியியல் திட்டத்துடன் வீதி புனரமைக்கப்பட வேண்டும், இல்லையேல் இவ்வாறான பள்ளங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.

மக்களின் தேவைகளை அலட்சியப் படுத்தாது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை விரைவாக எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.