தமிழர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள்



தமிழர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அரசாங்கத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இணையான வளப்பங்கீடு தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - இந்த நாட்டில் பௌத்த சிங்களவர் அல்லாத மக்களுக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு. ஆனால் அதற்காக மக்களிடம் பொய் சொல்வதற்கு நான் தயாராக இல்லை.

அரசியல் தீர்வு வரும்போது வரட்டும் அரசியல் தீர்வுடன் சேர்த்து அபிவிருத்தியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்களைப் போன்று தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்.

யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள்ளை வானில் கடத்திச் சென்ற போது நானும் நண்பன் ரவிராஜூம் பல போராட்டங்களை நடாத்தினோம். இன்று பேசும் பலர் அன்றும் இருந்தார்கள். அவர்கள் தெருவிலே இருக்கவில்லை ஓடி ஒழிந்திருந்தார்கள். மக்களை வெள்ளை வான் கடத்தியது என்றால் அவர்களை விமானங்கள் கடத்தி வெளிநாடு கொண்டுபோய்விட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஸா இருவரையும் அடுத்து சிரேஷ்ட அரசியல்வாதி நான் மற்றைய அனைவரும் எனக்குப் பின் அரசியலுக்கு வந்தவர்கள். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் வயதில் எனக்கு மூத்தவர் ஆனால் அரசியலில் அவருக்கு நான் மூத்தவன்.

நாட்டில் பல பாகங்கள் சென்றாலும் அங்கு பேசும் தமிழை விட மட்டக்களப்பு தமிழ் காதில் இனிக்கிறது. மீன் பாடும் தேனாடு என்பதால் மீன்பாடல் இங்குள்ள மக்களின் பேச்சு வழக்கிலே ஒலிக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த நிலையில் 39 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஏறாவூர்பற்று பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் காலம் பூராகவும் எதிர்க்கட்யில் இருக்க முடியாது எழுச்சி பெற வேண்டும் இனிமேலாவது அதிகாரங்களை குவித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பங்காளியாக மாறவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் எமது கதைகளை செவிமடுப்பார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் எதிர்காலத்தில் அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அமைச்சராக வரவேண்டும். அதன் மூலம் அரச அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டுவந்து மட்டக்களப்பு மக்களுக்கு சேவையாற்றக்கூடியவராக மாற வேண்டும்' என்றார்.