புதுக்குடியிருப்பில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை தினம்

நாயன்மார் காட்டிய நெறியில் சென்றால் கலியுகத்தில் இறைவனைக்காணமுடியும். நாயன்மார்கள் தோன்றியிருக்காவிட்டால் இந்துசமயத்தின் பொக்கிஷங்களான தேவார திருவாசகங்கள் கிடைத்திருக்காது.

இவ்வாறு இந்துப்பிரசாரகர் அகரம் செ.துஜியந்தன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலையில் சுந்தரமூர்த்திநாயனார் குருபூசை தினம் அறநெறி அதிபர் தி.நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. இங்கு மாணவர்களினால் சுந்தரமூர்த்திநாயனார் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகளும், சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்களும் பண்ணோடு இசைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட இந்துப்பிரசாரகர் அகரம் செ..துஜியந்தன் தெரிவிக்கையில்...
இறைவனை தோழனாக பாவித்து முக்தியடைந்தவர் சுந்தரமூர்த்திநாயனார். இறைவனே நேரில்வந்து தடுத்தாட்கொண்ட பெருமைக்குரியவர் சுந்தரமூர்த்திநாயனார். இறைவனை யார் மெய்யன்போடு உருகி வழிபாடுசெய்கின்றார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் துன்பங்கள் பனிபோல் விலகிவிடும். இன்றைய காலத்தில் எம்மமைப்படைத்த இறைவனை வழிபடுவதற்க்கே நேரமில்லை என்று சொல்லுகின்றனர். நேரத்தையும், காலத்தையும் நிர்ணயம் செய்கின்றவன் இறைவன் ஒருவனே நாம் அல்ல. 

நாயன்மார்கள் பாடியுள்ள தோவார, திருவாசகங்களை இறைசிந்தனையோடு மனம் உருகிப்பாடினால் எம் வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆதியும் அந்தமும் இல்லாத எமது சமயத்தில் பொதிந்துள்ள கருத்துக்கள் அளப்பரியனவாகும். இந்துசமயம் காலத்திற்க்கு காலம் பிறமதங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டவேளையில் இவ்வாறு தோன்றிய நாயன்மார்கள் அதனை பாதுகாத்தார்கள்.

சிறுவயதில் இருந்தே நற்பழக்கவழக்கங்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் படித்து பெரிய பதவிகளில் இருந்தாலும் உங்களிடம் நற்பண்புகள் இல்லையென்றால் இந்த சமூகம் உங்களை மதிக்காதுபோய்விடும். இந்துசமயம் விஞ்ஞானத்தையே வியக்கவைக்கும் அதிசயங்களைக் கொண்ட மதமாகும். இன்று நடக்கும் காரண காரியங்களுக்கெல்லாம் விளக்கங்களை எமது மதம் அன்றே சொல்லிவிட்டது. மாணவர்கள் நாயன்மார்கள் காட்டியபாதையில் சென்று இறைசிந்தனையோடு கூடிய கல்வியை கற்றால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் என்றார்.