மட்டக்களப்பு, யாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவங்கள் !!


யாழ். குடா நாடு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்திருப்பது தொடர்பில் மக்கள் அச்சமும், கவலையும் வெளியிட்டுள்ளனர்.

சிறிதுகாலம் ஓய்ந்திருந்த வாள்வெட்டுக் கும்பல்களின் வன்முறைகள் யாழ் குடா நாட்டில் கடந்த இருவாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்தே மக்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் (03.07.2018) மாத்திரம் யாழ்ப்பாணத்தின் இருவேறு இடங்களில் வாள்வெட்டுக் கும்பல்களின் வன்முறைகளில் காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த இருவர், குடும்பத்தலைவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளிலில் முகத்தை துணியால் கட்டிவந்த இருவரே இந்த குற்றச்செயலைச் செய்துவிட்டு தப்பித்தனர் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஹரிதாஸ் சத்தியதாஸ் என்ற குடும்பத்தலைவரே காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு புகுந்த முகத்தை மூடி அணிந்துவந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று 15 வயது மாணவனைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிவராசா சாரூஜன் என்ற மாணவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவன், ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் தனு ரொக்கின் உறவுமுறை இளைய சகோதரன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாயிலுள்ள தனு ரொக்கின் வீட்டில் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய கும்பல், அவரை அச்சுறுத்தும் வகையில் அவரது உறவுமுறைச் சகோதரனையும் தாக்கியுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக இடம்பெறும் வாள்வெட்டு கும்பல்களின் அடாவடித்தனங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாந்து சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இன்று (04.07.2018) இந்தக் கட்டளையை வழங்கினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் பாலியல் பலாத்கார சம்பங்களும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன.

எனினும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பொலிஸார் கைது செய்யவில்லை என பல தரப்பினரும் குற்றச்சாட்டியுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் சிறப்பு மாநாட்டை வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஆளுநர் கூட்டியுள்ளார்.

அந்த மாநாட்டுக்கு மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்பு நேற்று தொடக்கம் வரும் 18-ஆம் திகதிவரை இடைநிறுத்த வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் அண்மைக்காலமாக கொள்ளை, கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மூவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு தொகுதியை மீட்டுள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

கடந்த யூன் மாதம் 29-ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீட்டுடன் இருந்த அடகு பிடிக்கும் நிலையத்தின் உரிமையாளர் கொள்ளையர்களினால் அச்சுறுத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது.

இதன்போது சுமார் 38 பவுன் நகைகளும் ஏழரை இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மூவரை கைதுசெய்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை மற்றும் செங்கலடி ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளின்போது அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் மூலம் மட்டக்களப்பில் உள்ள பிரபல நகை விற்பனை நிலையத்தில் விற்கப்பட்ட சுமார் 20 பவுண் நகைகள் உருக்கிய நிலையில் கட்டியாக மீட்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைகளின் பிரதான சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவி பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.

இதேநேரம் நேற்று புதன்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு முருகன் ஆலய வீதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர் ஒருவர் அங்கிருந்த பெண்ணின் 15 பவுண் தங்க தாலிக்கொடியினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுபொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.