அருகம்பையில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்


(பாறுக் ஷிஹான்)



அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை – சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (28) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் பகுதிகளாகும். இந்நிலையில், அண்மைக்காலமாக குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதிகளில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.