தனது 38 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிவந்த ஏ.தர்மதாஸ தனது 38 வருட அரச சேவையிலிருந்து நேற்றுடன் (27) ஓய்வு பெற்றார்.

முன்னைநாள் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகக் கடமையாற்றியிருந்த ஈ.குலசேகரனின் ஓய்வுக்குப் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டில் சேவை மூப்பின் அடிப்படையில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இவர் கடந்த 5 வருடங்களாகச் சிறப்பான முறையில் தனது கடமைகளை முன்னெடுத்திருந்த நிலையில் தனது 60 ஆவது வயதுப் பூர்த்தியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

அக்கரைப்பற்று – 7 ஆம் பிரிவில் வசித்துவந்த ஆரியதாஸ – ரஞ்சிதம் தம்பதியினரின் தலைமகனாகக் கடந்த 1958 ஆம் ஆண்டில் பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் கற்றிருந்தார். அவ்வேளையில் உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கி, பாடசாலை மட்டம் மற்றும் கழக மட்டங்களில் நடாத்தப்பட்ட உள்ளூர், வெளியூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

தனது 23 ஆவது வயதில் (1981) அரச சேவையில் இணைந்த இவர் தனது முதலாவது அரச பணியான விசேட சேவைகள் உத்தியோகத்தராக 7 வருடங்கள் கடமையாற்றிய நிலையில் கடந்த 1987 ஆம் வருடம் கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். அன்றிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை 27 வருடங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து (22) கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலத்துக்குக் காலம் சிறப்பாகச் சேவையாற்றியிருந்த நிலையிலேயே சேவை மூப்பின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

கடந்த காலங்களில் இவர் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான பிரதி தலைவராகவும், தோணிக்கல் மேல் கண்ட விவசாய அமைப்பின் தலைவராகவும், அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும், ஆலையடிவேம்பு இந்துமா மன்றத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும், அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானத்திற்குட்பட்ட சங்கரப்பத்தான் குடி மக்களின் வண்ணக்கராகவும், கோளாவில் அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் நிருவாக சபை உறுப்பினராகவும் பல பதவிகளை அலங்கரித்து தமிழ்த் தேசிய சிந்தனைகளுடன் விவசாய அபிவிருத்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்.

அண்மையில் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்றுக்கொண்ட திரு. ஆரியதாஸ தர்மதாஸ அவர்களது பாரியார் திருமதி. பவானி தர்மதாஸ கடந்த காலங்களில் விஞ்ஞான ஆசிரியையாக இருந்து தற்போது அக்கரைப்பற்று சென். ஜோன் வித்தியாலயத்தின் பிரதி அதிபராகக் கடமையாற்றுகிறார். இவரது மகளான திருமதி. வினித்தா லோகநாதன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வருவதுடன், மகனான தர்மதாஸ கிரிஷாந்த் அம்பாறை ஹாடி தேசிய உயர் தொழிநுட்பக் கல்லூரியில் ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியைப் பயின்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.