ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு


திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள்எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடந்த வெள்ளியன்று (08) சிறப்பாக நடைபெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஏ.எல்.முஸ்ஃபிறாவின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் மகளிர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்வுகள், நாடகங்கள் என்பன இடம்பெற்றதுடன் சிறந்த முறையில் சேவையாற்றிய சங்க உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வுகளில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் பிராந்திய இணைப்பாளர் இணைப்பாளர் திருமதி. வாணி சைமன், அம்பாறை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுரேக்கா எதிரிசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.