குழப்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கின்றார்கள்; அலிஸாஹிர் மௌலானா



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)


குட்டையை குழப்பி விட்டு அதில் அவர்கள் நினைத்த அரசியல் ரீதியான இலாபத்தை எடுப்பதற்காக குழப்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மண்டபத்தில்   இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் எதிர்பாராத விதமாக நாங்கள் கனவிலும் சிந்திக்காத அடிப்படையில் சிறிய கும்பல் சண்டாளிகள் செய்த விடயத்தால் முழு சமூகமும் தலை குனியக் கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

எமது முஸ்லிம் சமூகம் மீது கறி பூசுவதற்காக பார்த்திருந்து பலர் இந்த சந்தரப்பத்தினை பயன்படுத்தி மிகவும் கொடி முறையில் எங்களை கேவலப்படுத்துகின்ற நிலையிலே, எங்களது பொருளாதாரத்திற்கு தாக்குதல் செய்கின்ற முயற்சிகளை, எமது இருப்புக்கள், உயிர்களுக்கு தொந்தரவு தருகின்ற நிகழ்வுகளை வடகிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இந்த பகுதி மக்களுக்கும் தந்து கொண்டிருக்கின்றார்கள்.

குட்டையை குழப்பி விட்டு அதில் அவர்கள் நினைத்த அரசியல் ரீதியான இலாபத்தை எடுப்பதற்காக குழப்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கின்றார்கள். இதனால்தான் எமது சமூகத்தை நிதானமாக வழி நடத்த கடமைப்பட்டுள்ளோம். அநியாயமான முறையில் சம்மந்தம் இல்லாதவர்களை கூட கைது செய்தார்கள்.

நாங்கள் ஒன்றாக எமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய எதிர்பார்க்கின்றோம். எமது சகோதரிகள் அலுவலகங்களுக்கு கௌரவமாக உடை அணிந்து செல்வதற்கு ஏற்ற முறையில் சுற்றுநிருபத்தினை மாற்றி அமைத்தோம்.

தற்போது ஆறுநூறுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறான பல கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். அத்தோடு எங்களை அகோரப்படுத்தும் பிக்குமார்களை சரியான முறையில் வழி நடாத்த வேண்டும் என்று கண்டியிலுள்ள பௌத்த பிக்குமார்களிடம் கோரிக்கை விடுத்தோம்.

எமது மக்கள் மீண்டும் கௌரவமாக தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம். எனவே எதிர்காலத்தில் பல நிகழ்வுகள், சர்ச்சைகள் ஏற்படலாம், சவால்கள் வரலாம், நாங்கள் மன உறுதியுடன் உங்களுக்காக போராடுவோம் என்றார்.