28 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் வ.குணசேகரம்

(ரவிப்ரியா)
மண்முனை தென் எருவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரபல கிராமமான குருக்கள்மடத்தைச் சேர்ந்த இலங்கை ஆசிரியர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த வல்லிபுரம் குணசேகரம் கடந்த மாதம் 21ந் திகதி தனது 28 வருட சீரான ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பயிற்றப்பட்ட கணித ஆசிரியரான இவர் முதலாவது நியமனத்தை நுவரெலியா நானுஓயா தமிழ் வித்தியாலயத்தில் அரம்பித்து தேத்தாதீவு சிவகலை வித்தியாலயத்தில் தனது சேவையை நிறைவுக்கு கொண்டு வந்தார்.

அவர் நுவரெலியாவில் நானுஓயாவில் ஒரு வருடமும் டயகமவில் 10 வருடங்களும் அரிய சேவையாற்றியுள்ளார். அங்கு ஆசிரிய சேவையில் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், சமூக சமய மேம்பாட்டுப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரரமாக இயங்கியவராகும்.

இதற்குச் சான்றாக அக்காலத்தில் யரவல் டிவிசன் ஸ்ரீமுத்தமாரியம்மன் ஆலய வளர்ச்சியிலும் கும்பாபிஷேகத்திலும் இப்பகுதிக்கான மின்சார விநியோகத்திலும் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய செயற்பாடுகளுக்கான அன்றைய பொருளாதார பிரதி அமைச்சரான முத்து சிவலிங்கத்தால்; அகில இலங்கை சமாதான நீதிவானாக பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் 2003 காலப்பகுதியில் சொந்த மாவட்டத்தில் கால் பதித்தார். அம்பிளாந்துறையில் ஆரம்பித்து, பெரியபோரதீவு, செட்டிபாளையம் களுதாவளை, தேத்தாதீவு என 5கிராமங்களுக்கு 17வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரிய சேவையை பகிர்ந்து கொண்டார்.

இவரது ஆசிரிய சேவைக்குச் சமாந்தரமாக பல்வேறு சமூக சமய பணிகளிலும் பணியாற்றியமை இவரது தனித்துவமாகும்.

அந்தவகையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய சிவநெறி மன்றத்தின் தலைவர், சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவர், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிருவாகசபை உறுப்பினர், செயலாளர், கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகி என சமூக மட்ட பதவிகளை ஏற்று மக்களின் அன்றாட பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து வைப்பதிலும் சமூக எழுச்சியிலும் அக்கறையுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்.

மது ஒழிப்பையம், சிறுவர் துஸ்பிரயோகத்தையும் இல்லாதொழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்.

தான் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்த பயிற்சி நெறிகளான வீட்டு மின்னிணைப்பு பயிற்சிநெறி, படவரைஞருக்கான பயிற்சிநெறி, முறைசாரா கல்வி என்பவற்றை சமூக பயன்பாட்டிற்காக பிரயோகித்து ஏழை மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

இவரின் சிறந்த சமூக சேவைகளுக்காக சாமஸ்ரீ, தேசகீர்த்தி, தேச அபிமானிய ஆகிய கௌரவ பட்டங்களை தனதாக்கிக் கொண்டவர்.

கதிராமத்தம்பி வல்லிபுரம் முருகுப்பிள்ளை மங்கையற்கரசு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1960.07.21ம் திகதியன்று பிறந்தார். தனது 32 ஆவது வயதில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம்வட்டாரத்தைச் சேர்ந்த பாலசிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபருமாகிய் தவமணிதேவி அவர்களைத் தனது 32 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 02 பெண்பிள்ளைகளும் 02 ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.