அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களினால் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!


(லியோன்)
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்னறன.

அந்தவகையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களினால் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய சுகாதார ஆலோசனை குழு செயலாளரும் வித்தியாலய உடற்கல்வி பொறுப்பாசிரியருமான மேனகா அவர்களின் ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் எஸ்.ரவிதேவன் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் மலர்விழி சிவஞானஜோதி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.