(ரவிப்ரியா)
கிழக்கில் பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமான பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் வருடாந்த சக்திப் பெருவிழா மிகவும் எளிமையான முறையில் பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறத்தல்களுக்கு அமைய சுகாதார முறைகள், சமூக இடைவெளி ஆகியவற்றை பேணி கடந்த 17ந் திகதி முதல் கிரியைகளுக்க மட்டும் முக்கியத்துவம் அளித்து நடைபெற்று வந்தது.
19ந் திகதி திங்களன்று மாலை சப்புறம் இன்றியே (ஆண்டு தோறும் மிகுந் எடுப்பில் நடைபெறுவது வழக்கம்); அம்பாளின் ஊர்காவல் திரு உலாவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
எனினும் 20ந் திகதி செவ்வாயன்று தீ மிதிப்பிற்கு முன்னோடியாக அன்று மாலை நடைபெறும் முக்கிய நிகழ்வான தீக்குளிப்பும். மறுநாள் 20ந் திகதி நடைபெறுவதாக இருந்த தீமிதிப்பு நிகழ்வும் ஆலய நிர்வாகத்தின் ஆலோசனைக்கமைய ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஆலய வளாகத்தில் முறுகல் நிலை ஒன்று காணப்பட்டது.
நிர்வாகத்தினர் தீக்குளிக்கருகே வழக்கம்போல் தேவையான விறகுகளை அடுக்கி வைத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இது தொடர்பாக ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலய, மற்றும் வடபத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் ம.ஜெயாநிதியிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, சக்திப் பெருவிழா தொடங்கிய மூன்று நாட்களின் பின்னர் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற ஆலயங்கள் சம்பந்தமான சுகாதாரப் பிரிவினரும் பொலிசாரும் ஒழுங்கு செய்த கூட்டத்தின் பிரதேசத்திற்கான பொதுவான தீர்மானத்திற்கமைவாகவே தாங்கள் கடற்குளிப்பையும். தீமிதிப்பையும் ரத்துச் செய்ததாக குறிப்பிட்டார்.
அக் கூட்டத்தில் தீமிதிப்பை பக்தர்களின்றி ஆலயத்தின் வழக்கமாக தீமிதிப்பை அரம்பித்து வைக்கும் குருமார், தெய்வத்திற்கு ஆடுவோர்; என மிக குறைந்தளவிலானோர் (10பேருக்குள்) சம்பிரதாயபூர்வமாக பங்குபற்றுவதற்கு அனுமதிக்குமாறு கோரிய போதும் அது எற்றுக் கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
அதனாலேயே அந்த முக்கிய நிகழ்வுகள் இரண்டையும் ரத்துச் செய்வதைத் தவிர எமக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. இதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளும் நிலை பக்தர்களுக்கு இருக்கவில்லை. இதனால் பக்தர்களிடம் ஒரு பதற்ற நிலை உருவாகியது உண்மையே. எனினும் நாம் அதை பல தடவை தெளிவுபடுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம்.
சுகாதார நடைமுறைககள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் பதாதைகள் பல ஆலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அடிக்கடி ஒலிபெருக்கி மூலமும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனால் பக்தர்கள் எமக்கு ஒத்தழைப்பு வழங்கத் தவறவில்லை. பூட்டிய அலயத்தில் பூஜை நடைபெறுவது போன்று மிகக் குறைந்த பக்தர்களே கலந்து கொண்டனர்.
நான் பதவி ஏற்று முதல் வருடத்திலேயே இத்தகைய ஒரு நிலைக்கு முகம் கொடுக்க வேண்டி எற்பட்டது குறித்து நான் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றேன் என அவர் கண்கலங்க தெரிவித்தார்.
வருடாவருடம் இந்த ஆலயத்தில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்ற காத்திருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் (ஆண் பெண் இருபாலாரும்) மாவட்டத்தின் நாலாபக்கங்களிலிருந்தும் தீமிதிக்க அணி திரள்வது வழக்கம்.
இம்முறை தீ மிதிப்பதற்கு ஆயத்தமாக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர்களிடம் தெய்வ குற்றத்திற்கு ஆளாகிவிடுவமோ என்ற அச்சமும் மன உளைச்சலும் அவர்களிடம் காணப்பட்டது.
கிராமத்தைப் பொறத்தவரையில் தெய்வ குற்றத்தால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பரவலாகக் காணப்படுகின்றது.
கிழக்கில் பல இடங்களில் திமிதிப்பு இடம் பெற்றதை பத்திரிகைகளில் தொலைக் காட்சிகளில் எம்மால் படங்கள் மூலமும் காணக் கூடியதாக இருந்தது; தொற்று இல்லாத இந்த பிரதேசத்தில் ஏன் இதற்கு தடை விதிக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பியவாறு பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.