பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து இரு அலுவலக உதவியாளர்கள் தனது அரச பணியினை நிறைவு செய்கின்றனர்.



(சித்தா)

பட்டிருப்பு கல்வி வலயத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வந்த திரு.மாணிக்கம் - அருள்ராசா, திரு.கந்தையா ஜெகேஸ்வரன் ஆகிய இரு அலுவலக உதவியாளர்களும் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக நலன்புரி நிருவாக உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தபட்டதாக நடைபெற்றது.

இந் நிகழ்வினை நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு.எஸ்.மகேந்திரகுமார் அவர்களின் தலைமையில் நெறிப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக நலன்புரிச் சங்கத்தின் போஷகரும் வலயக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

 26 வருட அரச பணியில் இருந்து 04.07.2021 திகதி திரு.மாணிக்கம் - அருள்ராசா அவர்கள் மட்டக்களப்பின் பெரியபோரதீவுக் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் மாணிக்கம் - வள்ளியம்மை அவர்களது இரண்டாவது புதல்வராவார். தனது ஆரம்பக் கல்வி இடைநிலைக் கல்வியினை மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் கற்ற இவர் அலுவலக உதவியாளராக போரதீவுக் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இணைந்து கொண்டார். தொடர்ந்து மட்/பட்/முனைத்தீவு சக்தி ம.வி, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் என்பவற்றில் தனது பணியினை திறம்பட ஆற்றி ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.

இவர் தனது பணிக்காலத்தில் உயர் அதிகாரிகளினதும், சக ஊழியர்களினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒருவராக திகழ்ந்தார். வாசிப்பினை சுமையாகப் பார்க்கின்ற இக் கால கட்டத்தில் தினமும் பத்திரிகையினை வாசிக்கின்ற பழக்கமுடையவராகக் காணப்பட்டார். அத்துடன் வலய நிகழ்வுகள் அனைத்திலும் முன்னின்று உழைத்தவராவார். சிறப்பாக வருடாந்தம் இடம் பெறும் சரஸ்வதி பூசையில் இவரின் பிரசன்னம் முக்கியமானதாகும். 

30 வருடம் சேவைக் காலத்தைப்பூர்த்தி செய்து 29.06.2021 இல் தனது 57 ஆவது வயதில் அரச பணியினை நிறைவு செய்கின்றார் திரு.கந்தையா- ஜெகேஸ்வரன் அவர்கள் கல்விக்கு கல்லாறு எனப் பெயர் பெற்ற கோட்டைக்கல்லாறு கிராமத்தில் கந்தையா - இராஜேஸ்வரி அவர்களது மகனாகப் பிறந்து மட்/பட்/கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி என்பவற்றைப் பூர்த்தி செய்து திருகோணமலையில் அமைந்துள்ள பொறியியல் சேவை அமைச்சில் அலுவலக உதவியாளராக அரச பணியில் இணைந்த இவர் அலுவலகப் பணியாளர் விசேட தரம் பெற்று தனது பணியினை ஓய்வாக்கிக் கொண்டார்.

காணி விவசாய அமைப்பு திருகோணமலை, நீர்ப்பாசனத் திணைக்களம் களுவாஞ்சிகுடி, முகாமைத்துவத் திணைக்களம் திருகோணமலை, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் ஆகிய திணைக்களங்களில் தனது பணியினை மேற்கொண்டார்.

திரு.கந்தையா- ஜெகேஸ்வரன் அவர்கள்  பணிக்காலத்தில் தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளை மறுவார்த்தையின்றி பூர்த்தி செய்யும் ஆற்றல் படைத்தவர். அது மாத்திரமன்றி தனது பணிக்கு அப்பாலும் அவசரத் தேவைகளில் நீர்க்குழாய் பொருத்துதல், மின்னினைப்பு, கட்டிடங்கள் பழுதுபார்த்தல், வாகனங்களைத் திருத்துதல், கணனிகளைப் பழுது பாரத்தல், செயலமர்வுகளின் போது தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு பிறரின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியவராக காணப்பட்டார். இதனால் இவர் பணியிடங்களில் முக்கியமான நபராகவும் திகழ்ந்தார்.