சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.கிருஷ்ணவேணி- ஜீவநாதன் அவர்கள் அரச பணியில் இருந்து இளைப்பாறுகின்றார்.








(சித்தா)

இருபத்தொன்பது வருட காலம் கல்விப்பணியாற்றிய பட்டிருப்பு கல்வி வலயத்தின் உடற்கல்விப் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி. கிருஷ்ணவேணி- ஜீவநாதன் அவர்கள் இன்று (02.09.2021) தனது 60 ஆவது வயதில் அரச பணியில் இருந்து இளைப்பாறுகின்றார்.

செட்டிபாளையம்; கிராமத்தில் பிறந்து மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும், இடைநிலைக் கல்வியினையும் கற்றுத் தேர்ந்து உயர்தரக் கல்வியினை கல்முனை உவெஸ்லி கல்லூரியில் கற்ற இவர் 1992 முதல் உடற் கல்வி ஆசிரியராக மட்/பட்/தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்தில் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் மட்/பட்/கோவில்போரதீவு விவேகாநந்தா வித்தியாலயம், மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயம், மட்/பட்/மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயலம் ஆகிய பாடசாலைகளில் உடற்கல்விப் பாடத்தினைக் கற்பித்து அப் பாடசாலைகளில் உடற்கல்விப் பாடத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்காக உழைத்தார். இதன் காரணமாக கரப்பந்து, வலைப்பந்து போன்ற விளையாட்டுகளைத் தேசிய மட்டம் வரை இட்டுச் சென்றார். இதே போன்று குண்டு, பரிதி, ஈட்டி போன்ற மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் மாகாண மட்டம் வரை மாணவர்கள் பங்குபற்றவும் பாடுபட்டுழைத்தார். இதன் மூலம் மாணவர்களின், பெற்றோர்களின், கல்விச் சமூகத்தினதும் நன்மதிப்பினையும் பெற்றுக் கொண்டார்.

இச் சேவையின் பயனாக பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் உடற்கல்விப் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக 2017 ஆண்டு நியமனத்தினைப் பெற்றுக் கொண்ட இவர் இற்றைவரை உடற்கல்விப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் வாண்மை விருத்திச் செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். அத்துடன் மாணவர்களின் நலன் சார்ந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து உடற்கல்விப் பாடத்தினை முன்னிலைப்படுத்தினார். தவிர கோட்ட, வலய, மாகாண மட்ட போட்டிகளில் சிறந்த நடுவராகவும் தொழிற்பட்டார். மாணவர்கள் சாரா விளையாட்டுக் கழகங்களுக்கான போட்டிகளிலும் தன்னை ஈடுபடுத்தி தனது கிராமத்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்த பெருமையையும் இவருக்கு உண்டு.