(சித்தா)
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக நிதியுதவியாளராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை- கிருபையம்மா அவர்கள் அரச பணியில் இருந்து இன்று (27.10.2021) ஓய்வுபெறுகிறார். இவர் மட்டக்களப்பின் தெற்கே அமைந்துள்ள களுவாஞ்சிகுடி எனும் பதியில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை மட்/களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியினை மட்/களுதாவளை மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்தரத்தில் சித்தியடைந்த இவர் 1994 இல் எழுதுவினைஞராக அரச பணியில் இணைந்து கொண்டார்.
வேலுப்பிள்ளை- கிருபையம்மா அவர்கள் முதல் நியமனத்தை திருகோணமலை சுகாதார அமைச்சில் பெற்றுக்கொண்டு தனது பணியினை சிறப்பாக மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து இவரின் பணி திருகோணமலை நீர்ப்பாசனத் திணைக்களம், மட்டக்களப்பு நீரப்பாசனத் திணைக்களம், மட்டக்ககளப்பு கட்டிடங்கள் திணைக்களம் ஆகியவற்றில் தொடர்ந்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிதியுதவியாளராக தனது பணியினை மேற்கொண்டார்.
இறைபக்தியும், இரக்க சுபாபமும் கொண்ட இவர் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்றுவதில் சிறப்பானவராகக் காணப்பட்டார். தன்னை நாடி வரும் பயனாளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை உடனே வழங்குவதுடன் பெறவேண்டிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வழிகாட்டுபவராகவும் மிக நுட்பமாக பொறுமையுடன் பணியினை ஆற்றிவருபவராகவும் காணப்பட்டார்.
பாடசாலைக் காலத்தில் மிகவும் ஒழுக்கமான மாணவியாகவும், விளையாட்டுக்களில் சாதனை புரிந்த மாணவியாகவும் காணப்பட்டதினால் ஆசிரியர்களால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் திகழ்ந்தார். பாடசாலையில் கற்றுக்கொண்ட ஒழுக்கம் பணியிடங்களிலும் அதன் செல்வாக்கு பிரதிபலித்தமையை எல்லோரும் பாராட்டி நிற்கின்றனர்.