கல்குடா கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பிள்ளையான்-நல்லரெத்தினம் பணியில் நிறைவு

(சித்தா)

கல்குடா கல்வி வலயத்தின் வரலாற்றுப் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பிள்ளையான் - நல்லரெத்தினம் தனது அரச பணியில் ஓய்வு பெற்றார். மட்டக்களப்பின் சித்தாண்டி எனும் ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் கல்விப்பணியில் சிறந்த ஒருவராக கணிக்கப்பட்டார்.

ஆரம்பக் கல்விக்காக மட்/சித்தாண்டி இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் காலடி எடுத்த வைத்த பிள்ளையான்-நல்லரெத்தினம் அவர்கள் உயர்தரத்தினை மட்/ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் பயின்று  சித்திபெற்றார். இந் நிலையில் 1988.08.22 இல் ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் முதல் நியமனத்தை தனது பிறந்த ஊரிலுள்ள மட்/சித்தாண்டி இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டார். தனது கிராமம், தனது பாடசாலை, தனது பிள்ளைகள் என மாணவர்களுக்கு சிறந்த கல்வியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரும்பாடுபட்டுழைத்தார்.

தனது பணியினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் 1991/1992 கல்வியாண்டில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இணைந்து பயிற்சி பெற்றார். பயிற்சிக் காலத்தின் போது சக பயிலுனர்களுடன் அன்பாகவும், கலாசாலை முதல்வர், விரிவுரையாளர்களுடன் மரியாதையுடனும் பழகி கலாசாலையில் பெரும் மதிப்பினையும் பெற்றுக் கொண்டார். இக் காலத்தில் கலாசாலை சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான தொண்டாற்றினார். அத்துடன் கலாசாலையில் நடைபெறும் விளையாட்டு, கலாசார விழாக்களில் முக்கிய பாத்திரமாகத் திகழ்ந்தார்.

கலாசாலையிலிருந்து இருந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறிய இவர் மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பணியினை ஆரம்பித்தார். இக் காலப் பகுதியில் ஒரு வருட காலம் அதிபராக பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்த போது பாடசாலை வளர்ச்சிக்காக கல்விச் சமூகத்துடன் இணைந்து  உழைத்தார். தொடர்ந்து மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் 2008 இல் கல்குடா கல்வி வலயத்தின் வரலாற்றுப் பாட ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டு  ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார்.

இவர் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வரலாற்றுப் பாடத்தில் 50 வீதமாகக் காணப்பட்ட அடைவு மட்டத்தினை 86 வீதமாக அதிகரித்து கல்குடா வலயத்தின் சிறந்த ஒரு அதிகாரியாக தன்னை ஆக்கிக் கொண்டார். அமைதி, செய்தொழில் நேர்மை, குறித்த இலக்கை அடைய அர்ப்பணிப்பு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்டு தனது பணியினை ஆற்றி ஓய்வு பெறும் ஆசிரிய ஆலோசகர் பிள்ளையான் - நல்லரெத்தினம் அவர்களின் கல்விப் பணி அளப்பரியது.